’சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவத்தினருக்கு இசைக்கலைஞர்களை மதிக்கத்தெரியவில்லை’ என்று தனது ட்விட்டர் பதிவில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் பிரபல பன்மொழிப் பாடகி ஷ்ரேயா கோஷல். அவரது பதிவு மியூசிக் தெரியாத நான்சென்ஸ் என்று அந்த நிறுவனத்தைக் கண்டிப்பதுபோல் உள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பாடி வருபவர் ஸ்ரேயா கோஷல். இந்தியாவின் மற்ற எந்தப் பாடகிகளையும் விட அதிகமாக வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சமீபத்தில் வெளிநாடு செல்வதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். ஆனால், அவர்கள் அவர் வைத்திருந்த இசைக்கருவியை அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் அதை சரக்குப் பகுதியில் புக் செய்யச்சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனால் கடும் கோபத்துக்கு ஆளான ஷ்ரேயா தனது ட்விட்டர் பக்கத்தில்,... இசைக் கலைஞர்களோ அல்லது மற்றவர்களோ தங்களின் விலைமதிப்பற்ற இசைக் கருவிகளோடு பயணிக்க வேண்டாம் என்று நினைக்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். நல்லது. பாடம் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி’ என்று நக்கலாகப் பதிவிட்டிருந்தார்.

ட்விட்டரில் மிக அதிக ஃபாலோயர்கள் கொண்டவர் ஷ்ரேயா என்பதால் அவரது பதிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் நடந்த தவறுக்கு உடனே மன்னிப்புக் கோரியதோடு, தங்கள் ஊழியர்கள் என்ன மாதிரி நடந்துகொண்டார்கள் என்று தங்களுக்குத் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கத்தயார் என்றும் பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளது.