இசைக்குடும்பம்:

பிரபல இசைக்குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய தனித்துவமான குரலால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து திரையுலக ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானவர் பாடகி கல்பனா. 

இவருடைய தந்தை டி.எஸ்.ராகவேந்திரா மிக சிறந்த பாடகர் மட்டும் இன்றி சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகர். இவருடைய தாய் சுலோச்சனா சிறந்த பாடகி. கல்பனா சிறு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் பழகியவர். மேலும் இவருடைய சகோதரியும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை 3000 மேற்பட்ட இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ள இவர் கடந்த ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பிரபலமானவர்.

பின்னணி பாடகியாக கல்பனா:

கல்பனா முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு 'என் ராசாவின் மனசிலே' படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு... என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். 

இந்த படத்தை தொடர்ந்து 'தாஜ்மஹால்' , 'மாயாவி', 'மழை', 'ஆறு' உள்ளிட்ட 50 மேற்பட்ட படங்களில் மனதை வருடும் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தமிழ் மொழியை விட தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

திருமணம்:

பல்வேறு கனவுகளுடன் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு... காத்திருந்தது என்னவோ ஏமாற்றம் தான். திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் கணவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு வெடித்தது.

இதன் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இவரின் கணவர் வேறொரு திருமணம் செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்பனா சில காலம் பாடுவதை கூட நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்தார்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு பின் மனம் திரும்பி மீண்டும் பிரபல பாட்டு நிகழ்ச்சியின் மூலம் நடுவராக அறிமுகமானார். தற்போது பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியும் பல்வேறு இசை கச்சேரிகளில் பங்கேற்றும் தன்னுடைய கவலையை மறைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் கல்பனா.