மி டூ பதிவுகளில் தீவிரமாக செயல்பட்டதால் வலைதளங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்த பாடகி சின்மயி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்திருக்கிறார்.வழக்கம்போல் அவரது பதிவுக்குக் கிழே ஆதரவு, எதிர்ப்புக் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

கவிஞர் வைரமுத்துவால் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பாடகி சின்மயி போட்ட ட்விட்டுகள் சில மாதங்களுக்கு முன்பு ஹாட் டாபிக்காக இருந்தன. அச்சமயத்தில் அவரை ஆதரித்தும் எதிர்த்தும் சூடான பதிவுகளில் தொடர்ந்து வலைதளங்களில் நடமாடி வந்தன. பின்னர் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் சில தினங்கள் கொதித்து வந்த சின்மயி ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போய், இனி தான் ட்விட்டரில் பதிவுகள் போடப்போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார். ஆனாலும் அவ்வப்போது தனது இசை நிகழ்ச்சிகள், கணவர் இயக்கிய படம் குறித்த தகவல்கள் மட்டும் அவரது பதிவுகளில் இடம் பெற்றன.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் பெண்களின் ஆடை குறித்து நக்கலாகப் பதிவு செய்யப்பட்ட பஸ் வாசகம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். கோயமுத்தூரில் ஓடும் தனியார் பஸ் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள வாசகத்தில்,...பார்ப்பது கண்ணின் குற்றமல்ல...பார்க்க வைப்பது பெண்ணின் குற்றம்’என்ற போர்டை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,...பெண்களை அவமானப்படுத்துவதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்க என்று குறிப்பிட்டுள்ளார்.