பிரபல இசையமைப்பாளரும், வயலின் வித்வானுமான பாலபாஸ்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி அவருடைய இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர், மனைவி லட்சுமி மற்றும் அவருடைய 2 வயது குழந்தை தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, அவர் வந்து கொண்டிருந்த கார் நிலைதடுமாறி ஒரு மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் பாலபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவருடைய குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் காரை ஓட்டி சென்ற ஓட்டுநர் அர்ஜுன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து மங்கலாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் அவருடய குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் பாலபாஸ்கர் தன்னுடைய 12 வயதிலேயே மேடை நிகழ்ச்சிகளில் தன்னுடைய இசை பணியை துவங்கி, இளம் இசையமைபாளராக உருவாகினார். பல மலையாள படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.