’ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் நடிக்கமுடியாததால் மனதில் ஏற்பட்ட வலி ‘பேட்ட’ படத்தில் நடித்த பிறகுதான் தீர்ந்தது’ என்கிறார் தமிழின் முன்னாள் நம்பர் ஒன் நடிகை சிம்ரன்.

சந்திரமுகியில் ஜோதிகா நடித்த பாத்திரத்தில் துவக்கத்தில் கமிட் ஆகி மூன்று நாட்கள் வரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்ரன், தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து படத்திலிருந்து வெளியேறினார். அடுத்து அவருக்கு ரஜினி பட வாய்ப்புகளே வராத நிலையில் திரையிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் ஜோடியாக நடித்தது குறித்து மனம் திறக்கிறார்.

‘இது எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. கடுமையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா மூலம் என்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளேன். ஒருவேளை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் பெறுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பேட்ட படம் என்னுடைய பாதையை மீட்டு கொடுத்துள்ளது. என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். ஆனால் இன்னொரு புதிய துவக்கம் கிடைத்துள்ளது.

நான் ரஜினியின் தீவிர விசிறி, அவரை போல நடக்கவும் கண்ணாடியை ஸ்டைலாக அணியவும் பலமுறை முயன்று இருக்கிறேன். முதல் நாள் நடித்தபோது பதட்டமாகி என் வசனத்தையே மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அமைதியாக்கி சகஜமாக பேசினார். நாம் எல்லோருமே ரசிகர்களை மகிழ்விக்க தான் நடிக்கிறோம் என்று கூறி என்னை ஆசுவாசப்படுத்தினார்.

’சந்திரமுகி’ படத்தை இழந்ததில் எனக்கு நிறைய வருத்தம் உண்டு. ஆனால் ஒரு அழகான காரணத்தால் தான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் 4-வது நாள் நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே தான் நடிக்க முடியாமல் போனது.

இப்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் என் மனக்குறை போயே போச்சு. இனி இந்த கவுரவத்தைக் காப்பாற்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்’ என்கிறார் சிம்ரன்.