தாய்லாந்தில் இருந்து இரண்டு மாத ஓய்வுக்குப் பின்னர் சென்னை திரும்பியிருக்கும் சிம்பு மனம் திருந்திய மைந்தனாக மாறியிருப்பதாகவும் தனது முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்த அத்தனை மனோபாவங்களையும் அதிரடியாக மாற்றிக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘மாநாடு’படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அப்படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அறிவித்ததைத் தொடர்ந்து ஏறத்தாழ தலைமறைவாகவே ஆகிப்போன சிம்பு, நான்கு  தினங்களுக்கு முன்பு சனியன்று  புதிய கெட்டப்பில் சென்னைக்குத் திரும்பினார். இவ்வருகைக்குப் பின் அவர் ஏற்கனவே வீம்புக்கு அறிவித்த ‘மகா மாநாடு’படத்தைத் தொடங்கவிருக்கிறார். ரசிகர்களை ஒன்று திரட்டி மன்றத்தை வலுப்படுத்தி அரசியலில் குதிக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

ஆனால் உண்மை நிலவரம் முற்றிலும் வேறாக இருக்கிறது. தனது முந்தைய தவறுகளிலிருந்து வெளியே வந்து நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதையே சபதமாக எடுத்திருக்கும் சிம்பு, தான் செய்த தவறுகளிலேயே ஆகப்பெரிய தவறு வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’படத்தை உதாசீனப்படுத்தியதுதான் என நினைக்கிறார். தனது தவறுகளை சரி செய்ய அங்கிருந்துதான் துவங்கவேண்டும் என்று நினைக்கும் அவர் தயாரிப்பாளரை சந்திப்பதற்கு இயக்குநர் வெங்கட் பிரபுவை சந்தித்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தாராம். ‘எப்பன்னு சொல்லுங்க. ஒருநாள் கூட கேப் விடாம படத்தை முடிச்சுத் தர்றேன். புரடியூசர் கிட்ட பேசுங்க’என்று தரை மட்டத்துக்கு இறங்கி வந்திருக்கிறாராம். மிக சீக்கிரத்தில் ‘மாநாடு’சமாதானச் செய்திகள் வெளிவரக்கூடும்.