தமிழகம் முழுவதும்  ஜல்லிக்கட்டு விவகாரம்தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க தற்போது களத்தில் குதித்துள்ளார் சிம்பு.

பரபரப்பான சூழலில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சிம்பு சந்தித்தார். “முதல்ல நான் மனிதன்; பின்னர் நான் தமிழன்; அப்புறம்தான் நான் இந்தியன்” என்று ஆவேசத்துடன் கூறிய சிம்பு தமிழால் தனக்கு கிடைத்த பெயர் பெருமைகளை பட்டியலிட்டார்.  

சிம்பு அளித்த பேட்டி : தமிழர்களுக்கு எண்ணற்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதற்காக நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். அவற்றில் ஆகச்சிறந்தது உண்ணாவிரதம். இப்படி எண்ணற்ற போராட்டங்கள் நடத்தி நமக்கு ஒரு பிரயோஜனமும் கிடைக்கவில்லை. 

முன்பெல்லாம் தமிழர் பிரச்னைக்கு குரல் கொடுக்காத சிம்பு இப்போது ஏன் குரல் கொடுக்கிறான் என்று கேட்கிறார்கள். அப்போது நான் வயதில் இளையவன். இப்போது எனக்கு பக்குவம் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் எனக்கு மதிப்பு மரியாதை அளித்துள்ளனர். இதனால்தான் தமிழர்கள் பிரச்னைபற்றி பேசுகிறேன். 

எந்த பிரச்னை வந்தாலும் அதனை பொறுத்துக்கொள்கிறோம்; பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்கிறோம். தமிழர்களின் பலம், பலவீனமே இதுதான். ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரியம். அது நடத்தப்பட வேண்டும். உலகின் பல்வேறு இடங்களில் தமிழர்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. 

இப்போது நம் வீட்டிற்குள்ளேயே வந்து கழுத்தில் கத்தியை (ஜல்லிக்கட்டு மீதான தடை) வைத்து விட்டார்கள். இதனையும் நீங்கள் பொறுத்துக்கொள்ளப் போகிறீர்களா? தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது.  

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தும் மாணவர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். அவர்களை தாக்கியது தமிழ்நாட்டு போலீஸ். நான் போலீஸ் மேல தப்பு சொல்லவில்லை. 

அவர்களுக்கு அப்படி ஒரு கடமை வேண்டாம்னு சொல்றேன். இதற்கு யூனிபார்மை ஒரு நாளைக்கு கழற்றி வைத்து விடலாம். அவர்கள் என்ன அஜித், விஜய் படத்திற்கா போராட்டம் நடத்தினார்கள்?. 

எல்லோரும் தனித்தனியாக போராடுகிறார்கள். தடியடி நடத்தப்பட்டதற்கு அதுதான் காரணம் அன்று வெள்ளைக்காரர்கள் தாக்குதல் நடத்தியபோது, மகாத்மா காந்தி புதுவழியை கையாண்டார். அதன்மூலம்தான் விடுதலை கிடைத்தது. 

தமிழ் உணர்வுள்ள, தமிழர் நாட்டில் பிறந்த, தமிழரின் பெருமையும், உணர்வு பாரம்பரியம் கொணடவர்களுக்கு நான்சொல்கிறேன். 

நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில், வாய் மூடி கருப்புச்சட்டை அணிந்து 10 நிமிடம் நான் நிற்கப்போகிறேன். தமிழ் உணர்வுள்ள அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து உணர்வை வெளிப்படுத்துங்கள். 

நாளைக்கு நான் என் வீட்டு முன்னால் அமைதியாக போராட்டம் நடத்துகிறேன். வாங்கடா இப்ப அடிச்சு பாருங்கடா.

முடிந்தால் அடிச்சு பாருடா , நான் யாரையும் போராட சொல்லவில்லை , நான் எங்கேயும் போகவில்லை என்வீட்டு வாசலில் நான் நிற்க போகிறேன். 

அவரவர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் நிற்போம். 10 நிமிடம் நீ எந்த கட்சியாக வேண்டுமானால் இரு வா நாளைக்கு காட்டுங்க உலகம் பூரா தமிழன் என்றால் யாரு காட்டு 

எத்தனை நாளுக்கு தமிழர்களை அடிப்பீர்கள்? இதுதான் கடைசி. எனக்கு பிரச்னை இல்லை. நான் கிளம்பி அமெரிக்கா போய்விடுவேன். 

நல்லது செய்வதற்கு அதிகாரம் தேவையில்லை. நல்ல மனசு இருந்தாலே போதும். ஜல்லிக்கட்டு காளைகளைப் பற்றி பேச வெளிநாட்டு அமைப்புகளுக்கு உரிமை கிடையாது. தமிழர்கள் யாரும் அனாதைகள் இல்லை.

இவ்வாறு சிம்பு பேசினார்.