அஜீத் ரசிகர்கள் கிண்டலடித்தார்கள் என்கிற காரணத்துக்காக முன்கோபத்துடன் தனது ரசிகர்களை முட்டாள்களாக்கும் விதமாக, ‘என்னோட அடுத்த பட கட் அவுட்களுக்கு அண்டா அண்டாவா பால் ஊத்தி அபிஷேகம் பண்ணுங்க’ என்று  அறிக்கை விட்டிருக்கிறார் வம்புத்தம்பி சிம்பு. 

சுமார் ஒருவாரத்துக்கு ரொம்ப நல்லவராக இருந்த சிம்பு, ‘வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய்ப் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கிப்படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும். அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள்.

ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும் என்று  ரசிகர்களுக்கு அன்புக்கட்டளையிட்டிருந்தார் சிம்பு.

சிம்புவின் அந்த அறிக்கை குறித்து கமெண்ட் அடித்த புண்ணியவான்கள் சிலர், ‘இதோ பார்றா இவருக்கு ரசிகர்கள்லாம் இருக்காங்களா? என்று சீண்டியிருக்கிறார்கள். பாலாபிஷேகத்தை எதிர்த்து சிம்பு பேசியதால் அவர்கள் நிச்சயமாக  தல அஜீத் ரசிகர்களாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

 அதைக்கண்டு பி.பி. எகிறிய சிம்பு நேற்று  வெளியிட்டிருக்கும் இன்னொரு காணொலியில்…...வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள், கட் அவுட்களுக்கு பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் அண்டாக்களில்  ஊற்றுங்கள். ஏற்கனவே நான் வெளிட்ட வீடியோ குறித்து சிலர் விமர்சனம் செய்கின்றனர் எனக்கு ரசிகர்களே இல்லை என சொல்கின்றனர். எனவே படம் வெளியாகும்போது வேற லெவல்ல செய்யுங்க என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவர் சொன்னவுடன் அண்டாவில் பால் அபிஷேகம் செய்ய ரசிகர்கள் என்ன சிம்பு வீட்டு வேலைக்காரர்களா?