லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தை  ஒட்டி, அதே லைகாவின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் சிம்பு.

22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தியை தயாரிப்பு தரப்பில் தொடங்கி ஷங்கர்,சிம்பு வரை யாரும் மறுக்கவில்லை. 

இந்நிலையில் தங்களது ‘வ.ரா.வ’ படத்துக்கு சரியான ஒத்துழைப்பு தராததை ஒட்டி லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கரிடம் சிம்பு வேண்டாம் என்று சொன்னதாகவும் அதற்கு சற்றும் யோசிக்காமல் ஷங்கர் ஓ.கே.சொன்னதாகவும் தெரிகிறது.

அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் தற்போது கூறுகிறார்கள். ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கிற நிலையில் கமல் முதல் கட்டப்பிடிப்புக்கு 50 நாட்கள் வரை கால்ஷீட் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.