’என் மேல புரடியூசர் கவுன்சில்ல ஆயிரம் பஞ்சாயத்து இருக்கட்டும். ஆனா பொங்கலுக்கு என் படம் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ வந்தே தீரும் என அசால்ட்டாக அறிவித்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த அறிவிப்பால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சற்றே அதிர்ந்துபோயுள்ளது.

சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்றொரு ஏ’டாகூடமான படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன், தனக்குத் தரவேண்டிய நஷ்ட ஈடை செலுத்தாமல் சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்கவேண்டும் என்று கார் டயர் தேயுமளவுக்கு பலமாதங்களாகப் போய்வந்துகொண்டிருக்கிறார். மிஸ்டர் வம்பு தங்கள் சங்கத்துக்கு அடங்காதவன் என்பதால் தயாரிப்பாளர் சங்கமும் ராயப்பனின் புகாரை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 

இந்நிலையில் சற்றுமுன்னர் ஒரு செய்தியை வெளியிட்ட சிம்பு...’ என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தற்போது திரைத்துறையில் நடந்து வரும் தகவல்களை சிறிதும் பொருட்படுத்தவேண்டாம்.

நம்மைப்பற்றி தனிப்பட்ட எந்த நபரும் முடிவும் எடுக்க முடியாது. அதற்கு என்று ஒரு குழு உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையும் தாக்கி பேச வேண்டாம். அன்பை பகிருங்கள். உங்கள் அன்பிற்கு நன்றி. நீங்க இல்லாம நானில்லை. நம் கடமையை செய்வோம். முடிவு தானாக வரும். இறுதியாக பொங்கலுக்கு வர்றோம்’ என்று அறிவித்திருக்கிறார்.

‘ராஜாவாத்தான் வருவேன்’ படப்பிடிப்பு இன்னும் பாதி கூட முடியாத நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து வெய்ட்டிங்கில் இருக்கும் நிலையில், அதே பொங்கலுக்கு அஜீத், ரஜினி படங்களும் ரிலீஸாக உள்ள நிலையில் சிம்புவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு புல்லரிப்பை உண்டாக்கியுள்ளது