‘விருப்பமில்லாத பெண்ணைத் தொடுறது பெத்த அம்மாவைத் தொடுறதுக்குச் சமம்’ என்று சிம்பு பேசிய வீடியோ ஒன்று பொள்ளாச்சி சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு திரையுலகில் உள்ள பலரும் தங்கள் கண்டனத்தை வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். இதில் நடிகர் சிம்பு மிக ஆக்ரோஷமாகப் பேசியிருக்கும் வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதில்,’’ உங்க பிள்ளைங்ககிட்ட டெய்லி ஒரு அஞ்சு நிமிஷமாவது பேசுங்க. அதாவது விருப்பமில்லாத பொண்ணைத் தொடுறது பெத்த தாயைத் தொடுறதுக்குச் சமம்னு எல்லாத் தாயும் சொல்லிப் பாருங்க. அப்புறம் ஒரு பயலும் எந்தப் பொண்ணையும் தொடமாட்டான். இப்படி ஒரு விஷயத்தைப் பத்தி பிள்ளைங்க கிட்ட பேசுறதுக்குப் பெத்தவங்களுக்கு அறுவெறுப்பாதான் இருக்கும். ஆனா பாதிக்கப்படுற ஒவ்வொரு பொண்ணையும் உங்க பொண்ணா நினைச்சி நீங்க இத செஞ்சித்தான் ஆகணும்’ என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சிம்பு.

சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடு சென்று மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. ‘எழுமின்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பேசியதாகும்.

அந்த வீடியோ பதிவின் கீழுள்ள கமெண்டுகளில் ‘ராங்கான ஆளா இருந்தாலும் ரைட்டா பேசுறாருப்பா’ என்று தொடங்கி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார் சிம்பு.