தனக்குத் திருமணம் செய்யும் எண்ணமே இப்போதைக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்ட கையோடு தனது முன்னாள் காதலி நடிகை ஹன்ஷிகா மோத்வானியுடன் நடுக்கடலில் நடிகர் சிம்பு உற்சாக மூடில் இருக்கும் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகி வருகிறது மஹா. இந்தப் படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகிறார்.ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் நடிகை ஹன்சிகாவும் இடம்பெற்றுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், காவி உடை அணிந்து ஹன்சிகா புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் எதிர்ப்பு கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிம்புவின் திருமண செய்திகளில் பரபரப்பாகி வந்த நிலையில் அவற்றை மூர்க்கமாக மறுத்த சிம்பு புண்பட்ட மனதைத் தேற்றிக்கொள்ளவே இப்படி அவசர அவசரமாக தனது முன்னாள் காதலி படத்துக்குக் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் இப்படத்தில் நடிக்க சம்பளமாக எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.