ரஜினியை இரவு பகலாக விமர்சித்து வரும் சீமான், விஜயை சில நாட்களுக்கு முன் தாறுமாறாக தாளித்து எடுத்தார். அடுத்த சூப்பர் ஸ்டார் தம்பி சிம்புதான் என சீமான் சீறியதற்கு பின்னணியில் உள்ள அதிரடி ரகசியம் தற்போது கசிந்துள்ளது. 

சிம்புவுக்கு சீமான் கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம்தான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக். ‘தம்பி சிம்புவை வைத்து இயக்கி அடுத்தடுத்து மூன்று படங்கள் கொடுக்கப் போகிறேன்’ என்று மார்தட்டி ’அடுத்த சூப்பர் ஸ்டார் அவன் தான்’ எனக் கொக்கரித்து வருகிறார் சீமான். விஜயை வைத்து ஒரு படத்தை சீமான் இயக்கப்போகிறார் என்கிற பேச்சுகள் எழுந்த நிலையில் சிம்பு மீது சீமானுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? சீமானை நேரில் சந்தித்தபோது அவரது செயல்பாடுகளை சிலாகித்துப் பேசினாராம் சிம்பு.

 

இந்த மூன்று படங்களையும் தயாரிக்கப்போவது லைகா நிறுவனம் தான். அதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரனிடம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தபோது ஒரு கட்டளை இட்டாராம். ‘தம்பி சீமான் இயக்குற படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாராம். அப்போது கொடுத்த  வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற கிளம்பியிருக்கிறார் லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன். 

சிம்புவை லைகா நிறுவத்திற்கு கொண்டுபோய் சேர்த்ததே சீமான்தான். எட்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிம்புவின் சம்பளத்தை பதினைந்து கோடி வரை உயர்த்தக் காரணமும் சீமான் தான் என்கிறார்கள். இந்த ரீதியில் சென்றால் சிம்பு நாம் தமிழர் கட்சியில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறது தமிழ்த்திரையுலகம்.