கருப்பன்… குசும்புக்காரன்… என்ற ஒற்றை வசனத்தால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மீசை தவசி.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்த தன் மூலமாக பிரபலமானார். பெரிய மீசையும், தாடியும், கட்ட குரலும் தான் அவருடைய தனிப்பட்ட அடையாளமாகவே ரசிகர்களால்பார்க்கப்பட்டது. 

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசியை பார்த்து இவரா அது? என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு மொட்டை தலையுடன், எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமான நிலைக்கு மாறியுள்ளார். 

தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால்  உதவி கேட்டு மன்றாடினார்.  உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக அவருக்கு இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 ஆயிரமும், சூரி ரூ.20 ஆயிரமும் கொடுத்து உதவியுள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி தனது நண்பரான செளந்தர் மூலமாக ரூ.1 லட்சம் ரூபாயை அனுப்பிவைத்துள்ளார். 

அத்தோடு இல்லாமல் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு தொலைபேசி மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். விரைவில் இவருடைய சிகிச்சைக்கு உதவி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தவசியின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூபாய் 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிம்புவின் இந்த மிகப்பெரிய உதவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.