அஜித்,ரஜினி படங்களுடன் நாங்களும் பொங்கலுக்கு வருகிறோம் என்று ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தின் மூலம் உதார் விட்ட சிம்பு, அப்படத்தை ஒழுங்காக முடிக்கவிடாமல் சொதப்பி வருவதாக இயக்குநர் சுந்தர்.சி. வட்டாரங்கள் புலம்ப ஆரம்பித்துள்ளன.

கால்ஷீட்  குளறுபடி செய்வதில் பலே கில்லாடியான சிம்பு, ஒரு படத்தை எந்த சொதப்பலும் இல்லாமல் முடித்தார்  என்றால்தான் அது செய்தி. அப்படி ஒழுக்கமாக, நல்லபிள்ளையாக, வாலைச்சுருட்டிக்கொண்டு நடித்து முடித்த ஒரே படம் மணிரத்னத்தின்’செக்கச்சிவந்த வானம்’. சரி தம்பி திருந்திட்டார்போல என்ற நப்பாசையில் சிம்புவை வைத்து உடனே சுந்தர்.சி. தொடங்கிய படம்தான் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’.

துவக்கத்தில் இப்படத்துக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்த சிம்பு க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க சொதப்ப ஆரம்பித்திருக்கிறார்.  டிசம்பர் முதல்வாரத்தில் இப்படம் தொடர்பாக சிம்பு ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில், தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியானதால் இப்படத்தை வெளியிடும் முடிவைத் தள்ளி வைத்தனர் என்று சொல்லப்பட்டது. அதனால் இப்படம் ஜனவரி 26 வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை ஜனவரி 26 அன்று வெளியாவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பிப்ரவரி 1 ஆம் தேதி படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் ஒரு பாடலும் ஒன்றிரண்டு சீன்களும் பாக்கி உள்ள நிலையில், தனக்கு சம்பளபாக்கி இருப்பதாலேயே சிம்பு படப்பிடிப்புக்கு வராமல் முரண்டு பிடிக்கிறார் என்றும் சம்பளம் வந்தாதான் வருவேன் என்றும் தகவல்.