பாலியல் புகார் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இயக்குநர் டி.ராஜேந்தருக்கு நடிகை ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீதுபுகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்கான ஆதாரங்களை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்று விதவிதமாக பதிவிட்டு, தெலுங்கு பட உலகில் புயலைக் கிளப்பினார். மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் செல்போன்குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார்.

இதனால், தெலுங்கு நடிகர் சங்கத்தில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வரத்தக சபை முன்பும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, திரைப்படத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக அண்மையில் பேட்டியளித்தார் நடிகை ஸ்ரீரெட்டி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் தனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தம்முடன் நட்சத்திர ஓட்டல்களில் உடலுறவு கொண்டதாகவும், ஆனால் வாக்குறுதிகளை அவர்கள் மறந்து, தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, கோலிவுட் வட்டாரத்திலும் சூறாவளியை சுழலவிட்டார்.

இந்த பதிவை வெளியிட்டதால்,

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர்விஷால் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இருக்கும் கருப்பு பக்கங்களை வெளிக் கொண்டுவருவேன் என ஸ்ரீரெட்டி,  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும், தற்போது நெஞ்சில் துணிவிருந்தால், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்வெளியிட்டுள்ளார். அப்பதிவில் இந்த பூமியில் சந்தீப் மிகவும் மோசமான மனிதர் என ஸ்ரீரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் இந்த புகார் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், ஸ்ரீரெட்டியின் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என இயக்குநர் டி.ராஜேந்தர் அதிரடியாக தெரிவித்தார். சினிமாவில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறுவது அவருக்கான உரிமை என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.

இயக்குநர் டி.ராஜேந்தரின் இந்த கருத்துக்கு நன்றி தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி, அவருக்கு தலைவணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்