டி.ராஜேந்தரின் இளைய மகனும்,  நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு, தற்போது திருமண ஏற்படுகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து தற்போது இசையமைப்பாளராக இருப்பவர் குறளரசன். சிம்பு நடித்து திரைக்கு வந்த 'இது நம்ம ஆளு'  படத்தில் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மற்ற எந்த படத்திலும் இவர் இசையமைக்கவில்லை.

இந்த நிலையில் குறளரசன் சமீபத்தில்,  தன் தாய், தந்தையருடன்,  சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்று மதம் மாறியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து குறளரசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வேண்டுதலுக்காக மட்டுமே தர்காவுக்கு சென்றதாக கூறினார். பின் இவருடைய தந்தை டி.ராஜேந்தர், தன்னுடைய மகன் மதம் மாறியதை வெளிப்படையாக அறிவித்தார். எம்மதமும் சம்மதம் என நினைப்பதால் என் மகன் மதம் மாறியதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது, டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு ஆடம்பரம் அதிகம் இன்றி, வரும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, குறளரசன் மதம் மாறியது காதலிக்காக தான் என கூறப்பட்டு வந்த நிலையில்... இப்போது இவருடைய திருமண செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து டி.ஆர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.