கொரோனா பிரச்சனைக்கு பின்,  பிரமாண்டமாக ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது 'ஈஸ்வரன்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சிம்புவின் 46வது படமான ஈஸ்வரன் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாகவே மாறியுள்ள சிம்புவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறி நடித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதில்  பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் இசையில் ஈஸ்வரன் படத்தில் இருந்து வெளியான தமிழன் பாட்டு பாடல் 'ஈஸ்வரன் வந்துட்டான்' பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்புவின் குடும்பத்தில் இருப்பவர்களை சாகடிக்க துடிக்கும் வில்லனிடம் இருந்து சிம்பு எப்படி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் மைய கதை என்பதை ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை விறுவிறுப்பாகவும், கூடவே... காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ...