’ராட்சசன்’ல் மிடுக்கான ஒரு போலீஸ் கேரக்டர் செய்துவிட்டு அடுத்த படத்திலேயே ஒரு காமெடி போலீசாக களம் இறங்க ஒரு தனி தில் வேண்டும். அதற்காகவே விஷ்ணு விஷாலுக்கு சட்டையில் ரெண்டு ஸ்டார் குத்தலாம். ஆனால்...

அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்து தயாரித்திருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. குற்றவாளிகளைக் கண்டால் அஞ்சி நடுங்கும் சுபாவம் கொண்ட கான்ஸ்டபிள் விஷ்ணு. காக்கி யூனிஃபார்மை மாட்டினோமா எந்த வம்புதும்புக்கும் போகாமல் கடமையை முடித்தோமா என்று இருப்பவர்.

ஆனால் ஹாஃப் பாயில் சாப்பிடும்போது அதை யாராவது தட்டிவிட்டுவிட்டால், அவன் கதை முடிந்தது. வாழ்க்கையில் அவருக்கு கோபத்தை உண்டாக்கும் ஒரே சமாச்சாரம் அதுதான். அப்படி ஒரு முறை, பெரிய ரவுடியான சாய்குமார் விஷ்ணு விஷால் சாப்பிடும் ஆப்பாயிலை தெரியாமல்  தட்டிவிட, கோபத்தில் அவரை புரட்டி எடுக்கும் விஷ்ணு விஷால், அப்படியே அவரை கைது செய்து லாக்கிப்பில் அடைக்கிறார். போலீஸ் அதிகாரி உள்ளிட்ட பல கொலைகளை செய்த சாய்குமாரை, என்கவுண்டர் செய்ய சென்னை போலீஸ் தேடு தேடு என்று தேடிக்கொண்டிருக்க, அவர் தான் இவர், என்பது தெரியாமல் விஷ்ணு விஷால், சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சாய்குமாரை வெச்சு செய்கிறார்.

 இதற்கிடையே, சாய்குமாரின் ஆட்கள் போலீசாரை அடித்துவிட்டு அவரை மீட்க, வெளியே வரும் சாய்குமார், விஷ்ணு விஷாலை கொன்றுவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன், அதுவரை சிலுக்குவார்பட்டியில் தான் இருப்பேன் என்று இன்னொரு ஆஃப் பாயிலை சாப்பிட்டபடியே சபதம் எடுக்கிறார்.

அந்த கொலை முயற்சியிலிருந்து தப்ப பல்வேறு கெட்டப்புகளை போட்டுக்கொண்டு விஷ்ணு விஷால் ஓடி ஒளிந்துக்கொள்கிறார். இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியான அவரது அத்தை மகள் ரெஜினாவுக்கு உள்ளூர் அரசியல்வாதியான சவுந்தர ராஜாவுடன்  திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. ரவுடியிடம் சிக்காமல் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷ்ணு விஷால், அதை எப்படி செய்கிறார் என்பதை ஒரு சில இடங்களில்  காமெடியாகவும் பல இடங்களில் பரிதாபமாகவும்  சொல்லியிருப்பது தான் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. 

வழக்கமான இயல்பான நடிப்பில் கவரும் விஷ்ணு விஷால், மாறுவேடக் காட்சிகளில் அநியாயத்துக்கு சோதிக்கிறார். ரெண்டு, மூனாங்கிளாஸ் பிள்ளைகளே இதைவிட பிரமாதமா கெட் அப் போடுறாங்க பாஸ்.

 ஹீரோயின் ரெஜினா கெசண்ட்ரா, எப்போதும் போல ஹீரோவுடன் டூயட், சேசிங் என்று வந்து போகிறார். ப்ப்ப்பா ...ஒரு சின்ன சிலுக்குவார்பட்டி கிராமத்துப் பொண்ணுக்கு திகட்டத்திகட்ட எவ்ளோ மேக் அப்? 

ஒரே ஒரு பாடல் காட்சியிலும் ரெண்டு பிட்டு[தப்பான அர்த்தம் எடுக்காதீங்க] காட்சிகளிலும் மிக தாராளமாக வந்து போகிறார் ‘பிக்பாஸ்’ஓவியா.

வில்லனாக வரும் சாய்குமாரை காட்டிலும் அவரது அடியாட்களாக வருபவர்கள் காமெடியில் கவர்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வரும் இடங்கள் அனைத்தும் காமெடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. 

 இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மன் இருவரது பெயரை தொழில்நுட்ப கலைஞர்களாக சொல்லிக்கொள்ளலாமே தவிர மற்றபடி அவர்களை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அவர்களது பணியில் எந்தவித தனித்துவமும் இல்லை.

 ரசிகர்கள் குடும்பத்தோடு படம் பார்த்து சிரிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் செல்லா செய்யாவு வடிவமைத்திருக்கிறார். படத்தில் எந்தவித டபுள் மீனிங் வசனங்களோ, முகம் சுழிக்கும் காட்சிகளோ இல்லாமல் ரொம்பவே நேர்மையாக இப்படத்தை  எடுக்கமுயற்சித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது . ஆனால், அதற்காக கமர்ஷியலாக படம் எடுக்கிறேன், என்ற பெயரில் பல இடங்களில் ரசிகர்கள் கண் கலங்கும் அளவுக்கு வாட்டி வதைத்தும் விடுகிறார்.

படத்தின் முக்கிய ட்விஸ்ட் என்று இயக்குநர் நம்பிய ஹாஃப் பாயில் பிரச்சினை போலவே படமும் ஹாஃப் பாயில்தான். தியேட்டருக்குள் நுழையுமுன் மூளையைக் கழட்டி பேண்டின் இடதுப்பக்க பாக்கெட்டில் வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய படம்.