எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை .வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்காமல் இருந்த காலத்திலும், அவருடைய ரசிகர்கள் காட்டிய அன்பு அளப்பறியது. ரசிகர்களுக்காக மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்த சிம்பு, உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து மீண்டும் மன்மதனாக மாறினார். அதுமட்டுமின்றி ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கணக்குகளை ஆரம்பித்து தன்னைப் பற்றிய அப்டேட்களை அவரே வெளியிட்டு வருகிறார்.

தற்போது பொங்கல் விருந்தாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பம், காமெடி, ஆக்ஷன் என கலவையான இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் பிப்ரவரி 3ம் தேதி அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. சிம்புவை மகிழ்விப்பதற்காக அவருடைய ரசிகர்கள் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் அவரை நேரில் சந்திக்கவும் பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் சிம்பு தன்னுடைய பிறந்தநாள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும் என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு.
அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் மிக முக்கிய காரணம். கொரோனா காலகட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட “ஈஸ்வரன்” படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள். உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். . உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம். ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று "மாநாடு" டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.அனைவருக்கும் அன்பும்.. நன்றியும்... என தெரிவித்துள்ளார்.
