நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து ’கொலையுதிர் காலம்’ படவிழாவில் கொச்சையாகப் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் ஒரு சிலர் நயனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் மற்ற பெண்களுக்குப் பிரச்சினை வந்தபோது மவுனம் காத்த, குறிப்பாக ‘மி டு’ விவகாரங்களின்போது ஒரு அறிக்கை கூட விடாத நயன்தாரா இப்போது மட்டும் பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்ப்பது சரியல்ல’ என்று நடிகர் சித்தார்த் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,’’மீ டூ இயக்கத்தைப் பற்றி எனது துறையின் ஒட்டுமொத்த பெண்ணினமும் மவுனம் காத்தபோது எனக்கு அதிர்ச்சியே நிலவியது. தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்ப ஒரு சக்தி வாய்ந்த பெண்ணின் கோபத்தால் மட்டுமே இயலும் என்ற உண்மை என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

நீங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தான் அநியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள் என்றால் அது துணிச்சலே அல்ல. பாதுகாப்பற்ற உணர்வால் பலம் பொருந்திய பெண்கள்கூட மீடூ பற்றி பேசாமல் இருந்திருந்தீர்கள் என்றால் நீங்களும் குற்றவாளிகள்தான்.

மீடூ இயக்கத்தைப் பற்றி ஆணாதிக்க சிந்தனையுடன் பேசியவர்களுக்கு நிகரானவர்தான் நீங்களும். பாலின பாகுபாடின்றி ஒவ்வொரு நபரும் பொறுப்பை ஏற்க வேண்டும். குறிப்பாக பெண்களின் மனக் குமுறலுக்கு எதிராக மவுனம் காத்த பெண்கள் இதனை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் வெளிப்படையாக தெரிந்த ஒன்றைக்கூட நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது’ என்று நயன்தாராவின் மவுனத்தை வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடகி சின்மயி உட்பட சில நடிகைகள் தங்களுக்கு திரையுலகத்தினரால் பாலியல் தொந்தரவு ஏற்பட்டது என்று ‘மி டு’ மூலமாக அலறியபோது இன்றைய லேடி சூப்பர் ஸ்டாரான நயன் அது குறித்து மூச் கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்ப சித்தார்த் சொல்றது சரிதானே மேடம் உங்களுக்கு வந்தா ரத்தம்... மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?