மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும். 

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களில் வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டிகள் மற்றும் சண்டைகள் குறித்து போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கலந்துரையாடுவார். இறுதியாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகள் பெற்ற நபரை அறிவிக்கும் பொறுப்பையும் கமல் மேற்கொண்டு வந்தார்.

அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதற்குபின் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கமல்.

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை மற்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என அவர் இதிலிருந்து மீண்டு வர மொத்தம் 14 நாட்கள் ஆகும். இதனால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாக சூழல் உருவாகி உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக வரும் வாரம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுபோன்ற சூழல் ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸில் நடந்துள்ளது. கடந்தாண்டு பட ஷூட்டிங்கிற்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா வெளிநாடு சென்றதால் அவருக்கு பதில் அவரது மருமகள் சமந்தா தொகுத்து வழங்கினார். அதே போல் தமிழிலும் கமலுக்கு பதிலாக ஸ்ருதி தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.