தான் இரண்டு வருடங்கள் பயங்கரமான குடிபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும், அதை விட்டு மீண்டு வர பெரும்பாடுபட்டதாகவும் பிக்பாஸ் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் அதிர்ச்சி அளித்துள்ளார். தெலுங்கு நடிகை ஒருவருக்கு அளித்த நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேற்படியாக மனம் திறந்துள்ளார்.

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து பின்னர் அவருடனான உறவை முறித்துக்கொண்டார்.மைக்கேல் கார்சலுடன் காதல் வயப்பட்டிருந்தபோது படங்களில் நடிப்பதை சுத்தமாக நிறுத்தியிருந்த ஸ்ருதி அடுத்து ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’படத்தில் ஒப்பந்தமாகி பிசியாக நடிக்கத்தொடங்கியதோடு, மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடர்ந்து கதை கேட்க ஆரம்பித்தார். தந்தை கமல் கலந்துகொண்ட இளையராஜாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி, மற்றும் பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சிகளிலும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

தமிழ்ப்படங்கள் போலவே நீண்ட காலமாக தெலுங்குப் படங்களிலும் நடிப்பதை நிறுத்தியிருந்த ஸ்ருதி சமீபத்தில் கோபிசந்த் இயக்கத்தில் ரவி தேஜா படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக ஹைதராபாத் சென்ற அவர் தெலுங்கு  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நேர்காணல் நடத்திய நடிகை லட்சுமி மஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்த அவர் தனது காதல் முறிவு குறித்து விளக்கம் கொடுத்த பின்னர் சில மாதங்களுக்கு முன்பு வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தான் விஸ்கி என்னும் குடிபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும் தினமும் அந்தக் குடிக்கு அடிமையாகி உடல் நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த போதை பழக்கத்தை விட்டு வெளியே வர தான் பெரும்பாடுபட வேண்டியிருந்ததாகவும் வெளிப்படையாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.