’இத்தாலிய நண்பரை நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை. அவை வெறும் கட்டுக்கதைகள்’ என்கிறார் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதிஹாசனும் இத்தாலிய  நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக ஆதவ் கண்ணதாசன் - வினோதினி சுரேஷ் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

இத்தாலியரான மைக்கேல் கார்சலே பட்டு வேட்டி, சட்டையுடனும் ஸ்ருதிஹாசன் பட்டுப்புடவையிலும் திருமணத்துக்கு வந்தனர். இதில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இது சினிமா ஆர்வலர்களிடையே விவாதத்தைக் கிளப்பியது.அடிக்கடி  தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்ட ஸ்ருதிஹாசன், ''என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது'' போன்ற கமெண்டுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

கடந்த புத்தாண்டு தினத்தன்றும் கார்சலேவுடன் மிகவும் நெருக்கமாக உள்ள படங்களை ஸ்ருதி வெளியிட்டுருந்தார். அதை ஒட்டி தந்தை கமலின் அனுமதியுடன் ஸ்ருதி விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று செய்திகள் பரவின. அவற்றைக் கண்டு கடுப்பான ஸ்ருதி ‘திருமணச்செய்திகளில் துளியும் உண்மை இல்லை. அந்தச் செய்திகள் எனக்கு வெறும் செய்திகள் அவ்வளவுதான்’ என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த மைக்கேல் கார்சலேவின் அறிவுரைப்படிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களில் நடிப்பதற்கு முழுக்குப்போட்டிருக்கிறாராம் ஸ்ருதி.