இயக்குநராக அறிமுகமாகி 16ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ள  தனது 5 வது படத்தை இன்று துவங்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேருகின்றனர்.

2003ல் ‘இயற்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். மிக நிதானமாகப் படமெடுப்பவர் என்று பெயரெடுத்த ஜனநாதன் கடந்த 16 ஆண்டுகளில் ‘இயற்கை’,’ஈ’,’பேராண்மை’,’பொறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஜோடி சேரும், இவர்களுடன் ‘மெட்ராஸ்’ கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கினார்.  இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் விஜய் சேதுபதியும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

2015ல் கடைசியாக தல அஜீத்துடன் ‘வேதாளம்’ படத்தோடு தனது தமிழ்ப்பட சேவையை நிறுத்தி வைத்திருந்த ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதி ஹீரோ என்கிற ஒரே காரணத்துக்காக மட்டுமே மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.