Shruthi files complaint over morphed pics viral on social media

நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நடிகை ஸ்ருதி போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகை ஸ்ருதி ஹரிகரண் தாரக், யுர்வி, ஹேப்பி நியூ இயர், விஸ்மயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே‘ என்ற படத்திலும், மலையாள படங்களிலும் ஸ்ருதி நடித்திருக்கிறார். 

இந்த நிலையில், ஸ்ருதியின் புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து சில மர்மநபர்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார்கள். இதுபற்றி அறிந்த ஸ்ருதி அதிர்ச்சியும் அடைந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகை ஸ்ருதி வந்தார். 

பின்னர் அவர், போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை சந்தித்து தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் வெளியிட்டு இருப்பதாகவும், அவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். 

இந்த நிலையில், போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.