Shocking information of background to plotting a conspiracy in the case of Bhavana Molestation Case
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனா, வெயில், தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களிலும், ஏராளமான கன்னடம், மலையாள படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்துள்ளார்.
இவர், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்த பாவனாவை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றது.
அப்போது காரிலேயே பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார். இச் சம்பவம், கேரளாவையே உலுக்கியது. அடுத்த ஓரிரு நாளில், குற்றச்செயல் நடந்த காரின் டிரைவர் மார்ட்டின் அந்தோணி என்பவன் கைது செய்யப்பட்டான்.
அவன் பல்சர் சுனில் என்பவனை பற்றியும், அவனுடைய கூட்டாளிகளை பற்றியும் தெரிவித்தான். இதையடுத்து, பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-
நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார்.
பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங் களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் தொல்லை செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது.
அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
