'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' படங்களைத் தொடந்து, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான படம் 'அசுரன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில், தனுஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசையும், வேல்ராஜின் அசத்தலான ஒளிப்பதிவும் அசுரனை ரசிக்க வைத்தது. கடந்த அக்டோபர்  4ந் தேதி வெளியாகி திரையரங்கையே அதிரவைத்த இந்தப் படம், இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.  விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள் ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு தமிழ் திரையுலகினரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். மேலும், தெலுங்கு திரையுலகிலிருந்தும், இந்தி திரையுலகிலிருந்தும் ‘அசுரன்’ படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்  குவிந்தன. இப்படி ஒட்டுமொத்த திரையுலகையே ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்த 'அசுரன்' படம் தெலுங்கில் ரீமேல் செய்யப்படவுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், படத்தின் மேக்கிங்கை கண்டும், தனுஷின் நடிப்பை பார்த்தும் வியந்து பாராட்டியுள்ளார். 

மேலும், இந்தப் படத்தில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஹிந்தியில் அசுரனை ரீமேக் செய்ய ஷாருக்கான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன. கடந்த வாரம், ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான கரண் ஜோஹர் அரசுன் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.