‘நடிகர் பிரபாஸுடன் எனக்கு தவறான உறவு இருப்பதாக சில வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். என் குழந்தைகள் மீது சத்தியமாக நான் இதுவரை பிரபாசை நேரில் கூட சந்தித்ததில்லை’ என்கிறார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா.

இதற்கு முன்பும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை சந்தித்த ஷர்மிளா இம்முறை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நேரில் சென்று புகாரும் அளித்தார்.

அந்தப் புகாரில் சில யுடூப் வலைதளங்கள் உட்பட 15 வலைதளங்களின் பெயர்களைக் குறித்துக்கொடுத்த ஷர்மிளா,’ அரசியல் ரீதியாக என்னை அப்புறப்படுத்தவே இவ்வளவு அபத்தமாக என்னையும் பிரபாசையும் தொடர்பு படுத்தி எழுதியுள்ளார்கள். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் உள்ளடியும் உள்ளது என்பது எனக்குத் தெரியும்.

உண்மையில் பிரபாசை இதுவரை நேரில் சந்தித்ததோ அல்லது போனில் பேசியதோ கூட இல்லை. அப்படியிருக்க அவருடன் நான் தகாத உறவு வைத்திருப்பதாக எப்படி இவ்வளவு கொச்சையாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. பிரபாசுடன் தகாத உறவு இல்லை என்பதை நான் என் குழந்தைகள் தலையில் கைவைத்து சத்தியம் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்கிறார்.