‘பிரேமம்’ மலர் டீச்சரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர் என்ற ரகசியம் தற்போது கசிந்துள்ளது. தனக்குப் பிடித்த இரண்டு மலையாளப்படங்களுல் சாய் பல்லவியின் ‘ப்ரேமம்’ படமும் ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.

‘2.0’ ரிலீஸுக்குப் பின்னர் சற்று ரிலாக்‌ஷாக இருக்கும் இயக்குநர் ஷங்கர் அவ்வப்போது சில  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். அந்த வரிசையில் இரு தினங்களுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஷங்கர், மலையாளப் படங்களை தான் எப்போது ரசித்துப் பார்ப்பதாகவும், அவற்றில் சமீபத்தில் கவர்ந்த படங்களில் முக்கியமானவை என  ‘ப்ரேமம்’மற்றும் ‘அங்கமாலி டயரிஸ்’ படங்களைக் குறிப்பிட்டார்.

லிஜோ ஜோஸ் இயக்கிய ‘அங்கமாலி டயரிஸ்’ 2017ல் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டை அள்ளிய படம். ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில்,  4 கோடியில் தயாரிக்கப்பட்டு 60 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய, அதற்கும் மேலே,  திரையுலகுக்கு சாய் பல்லவியை மலர் டீச்சராக தாரைவார்த்த படம் என்று சொல்லுவதுதான் இன்னும் பொருத்தமானது.

ஷங்கரின் அப்பேட்டிக்கு நன்றி தெரிவித்த ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் தான் ஷங்கரின் ‘ஐ’ தவிர மற்ற அத்தனை படங்களையும் ’முதல்நாள் முதல்ஷோ’ பார்க்கிற அளவுக்கு தீவிர ரசிகன் என்று குறிப்பிட்டுள்ளார்.