Shankar films compare with SS rajamouli fillms
பிரம்மாண்டத்துக்கும், பிரமிப்புக்கும் நடுவுல ஒரு சின்ன கோடு. கோடுக்கு அந்தப்பக்கம் நின்னா அது ஷங்கர், இந்தப்பக்கம் நின்னா அது ராஜமெளலி. ரெண்டையும் பிரிக்குற அந்த கோட்டின் பெயர் என்ன தெரியுமா? அதுதான் ரசனை. ஒரு நொடியே ஆனாலும் ரசிகனை உறைய வைக்கிற ரசனை.
பிரம்மாண்டமே இல்லாம பிரமிப்பை உருவாக்கலாம். ஜஸ்ட் பழைய சாதத்துல ரெண்டே ரெண்டு கேரட்டை துருவி போட்ட மாதிரி. ஆனா பிரமிப்பு இல்லாத பிரம்மாண்டம் ஐஸ் இல்லாத ரோஸ்மில்க் மாதிரி.
சரி இப்போ ஏன் இந்த பட்டிமன்றம்?....விஷயமிருக்கிறது. என்.எஸ்.கே, மதுரம், பி.எஸ்.வீரப்பா போன்ற மேடை நாடக கலைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்க்கை பளிச்சிட்டது. கவலைகளோடு உழன்று கொண்டிருந்தவன் சில மணி நேர ஹாஸ்யத்துக்காக சினிமாவை பார்க்க ஆரம்பித்தான்.
அந்த நாள் வரையில் சினிமா என்பது ஒரு பிழைப்பு அதில் தோன்றுபவன் ஒரு கலைத்தொழிலாளி என்றுதான் நிலை இருந்தது. இயக்குநர்களும் நாயக துதி பாடாமல் கலைக்கே வந்தனம் சொல்லிக் கொண்டிருந்தனர். இது ஆரோக்கியமாக இருந்தது.

ஆனால் இந்த கட்டமைப்பை மெதுவாக உடைத்தெறிந்தவர் பாலக்காடு பக்கமிருந்து மெட்ராஸுக்குள் நுழைந்த எம்.ஜி.ராமச்சந்திரன். கூண்டுக்கிளி காலத்தில் அடக்க ஒடுக்கமாக உள்ளே நுழைந்தவர் ஆயிரத்தில் ஒருவன், எங்கவீட்டுப்பிள்ளை என்று புகழின் உச்சத்துக்கு போனபோது தலைவனாகவும், கடவுளாகவும் மாறிப்போனார்.
சினிமா என்பது ஒரு தொழில் எனும் யதார்த்த நிலை மறக்கடிக்கப்பட்டு நடிகன் என்பவன் சூப்பர் ஹியூமன்பீயிங்காக போற்றப்பட ஆரம்பித்தான்.
அடுத்து வந்த ரஜினிகாந்த்!...கேட்கவே வேண்டாம், தமிழ் சினிமாவில் இலக்கிய தரமும், ரசனை ரகசியமும் உடைபட்டு, சிதைபட்டு வீழ்த்தப்பட்டது இவர் காலத்தில்தான். சிகரெட்டை தூக்கிப்போட்டு கவ்வுவதை, தமிழன் ’ஸ்டைல்’ என்று எப்போது ரசிக்க துவங்கினானோ அன்றே அவனது தரம் அழிந்தது.

அவரை தொடர்ந்து வரும் விஜய், அஜித் எல்லோருமே சிதைந்து கிடக்கும் ரசனைத் தன்மையின் மேல் மீண்டும் மீண்டும் ஹீரோயிஸ ஆசிட்டை ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆக யதார்த்தத்துக்கு இடமளிக்காத இந்த திக்கற்ற காட்டில் ஒரேயொரு நம்பிக்கை கீற்று என்றால் அது கமலும் அவர் போல் வெகு சிலரும்தான். கலைக்கு நியாயம் சேர்க்கும் உண்மை கலைஞர்கள் இவர்கள்.
ஆனால் இவர்களை சூப்பர் ஹீரோக்களாக ரசிகன் ஏற்றுக் கொள்ளாதது தமிழனை பிடித்த பரம்பரை பைத்தியம் என்றுதான் சொல்வேன்!
ஹீரோயிஸ மாயாஜாலத்தால் நாயகர்களின் ராஜ்ஜியமாக இருந்த தமிழ் சினிமாவை மீண்டும் இயக்குநர்களின் குழந்தையாக மாற்ற முற்பட்டவர்களில் முக்கியமானவர் எஸ்.ஷங்கர். நம்பிக்கையே வராத ஹீரோயிஸ காட்சிகளுக்கு கூட பிரம்மாண்ட வர்ணம் பூசி வலுக்கட்டாயமாக ரசிகனை திரும்பிப் பார்க்க வைத்தவர். இவர் போன்றவர்களின் மூலம் மீண்டும் கலைக்கு வந்தனம் கிடைக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால் ஷங்கரின் கையில் குலுங்கியவையெல்லாம் காஸ்ட்லி களிமண்ணால் செய்யப்பட்ட மலர்கள் என்று தெரிய வரும்போது நொறுங்கிப் போனது சினிமாவை வெறித்தனமாக காதலிக்கும் கலைஞர்களின் இதயம். ஏன்?...பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பிய ஷங்கரின் படைப்பில் உயிர்ப்பும், பிரமிப்பும் இல்லை என்கிறான் சரக்கு இருக்கும் ரசிகன்.
இது உண்மையா? பாகுபலி ராஜமெளலிக்கும், எந்திரன் ஷங்கருக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களென்ன? இவற்றில் யார் சிறந்த இயக்குநர்?
(அடுத்த பார்ட்டில்
