‘என் படம் ரிலீஸாக விடாமல் சதி செய்’கிறார்கள். எங்களுக்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள்.  இனியும் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமை காப்பது? என்று திருவாளர் நகுல் சில வாரங்களாகவே பொங்கிப்பொங்கி வீடியோக்களாகப் போட்டுவந்தார். ஒருவழியாக இந்த வெள்ளி செய் வெளிவந்துவிட்டது.

அடடே இந்த நகுல் தம்பி  ஒரே ஒரு நல்ல படம் நடிச்சிட்டாரு போலருக்கு. அது ரிலீஸாகலைன்னா ஆத்திரம் வரத்தானே செய்யும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். அந்த நினைப்பில் முதல் ஒன்றிரண்டு காட்சிகளிலேயே ஒரு பெரிய கார்ப்பரேஷன் லாரிகொண்டு மண் அள்ளிப்போடுகிறார் நகுல்.

கதை? மனிதர் உறுப்புகளை மனிதர்களே திருடி மற்ற மனிதர்களுக்கு விற்கும் அதே ஆதி காலத்துக் கதை. சரவெடி சரவணன் என்ற பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புத் தேடும் பாத்திரம் நகுலுக்கு. ஓவர் ஆக்டிங் என்பார்களே அதன் உச்சம் நகுல்தான் என்று சொல்லவேண்டும். வேண்டாம்... போதும்... இதுக்கு மேல நடிச்சா அழுதுருவேன்... என்று நகுலை நோக்கிக் கதறி அழத்தோன்றும் அந்த சமயத்தில் நல்லவேளை கதை நகுலை விட்டுவிட்டு ஒரு ஆம்புலன்சில் பயணிக்க ஆரம்பிக்கிறது.

அரசியல்வாதி ஒருவரால் கொல்லப்பட்ட நிருபரின் சடலம் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸை ஓட்டிச்செல்ல ஆரம்பிக்கும் நகுலை அதிகபட்சம் கீழே இறங்கவிடாமல் கதையை முடித்திருக்கிறார் இயக்குநர் ராஜ்பாபு.

அஞ்சால் முஞ்சால் என்றொரு கதாநாயகி இருக்கிறார். நகுலும் இவரும் நல்லவேளை படத்தில் சந்தித்துக்கொள்ளவேயில்லை. இந்த அஞ்சால் குஞ்சாலின் நண்பர்கள் பட்டாளம் ஒன்று இருக்கிறது. அவர்கள் எதற்காக இந்தப்படத்தில் இருக்கிறார்கள் என்று யாராவது விளக்கினால் புண்ணியமாய்ப்போகும்.

படத்தின் இடைவேளைக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களால் நாமும் ஏறத்தாழ அந்த ஆம்புலன்ஸில் இருக்கும் பாடி கண்டிஷனுக்கு வந்த்விடுவதால் அடுத்து கதையில் நடக்கும் எதுவும் பிடிபடுவதில்லை.

நாசரும், பிரகாஷ்ராஜும் சற்று மங்கலாய் வந்துபோனது ஞாபகமிருக்கிறது. பைத்தியக்காரன் போல் ஒரு காஷ்ட்யூமில் நாயகி அஞ்சாலுடன் நகுல் டூயட் பாடியது போல் ஒரு ஞாபகம்.

வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல. அந்த பாட்டுல போட்ட காஸ்ட்யூம்களுக்காகவாவது இந்த நகுல் பயலை நாடு கடத்துங்க பாஸ்.