மாணவர்கள் தங்கள் வகுப்புக்கு கட் அடித்துவிட்டு திருட்டுத்தனமாக படம் பார்ப்பதுபோல தாங்கள் கடமை ஆற்றவேண்டிய நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு நயன்தாரா,விஜய் சேதுபதி,சிரஞ்சீவி நடித்துள்ள ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’படம் பார்த்த ஆந்திராவைச் சேர்ந்த 7 சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் நேற்று வெளியான படம் சைரா நரசிம்மா ரெட்டி. 1700-களில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா ரெட்டியின் வாழ்க்கையை கருவாக கொண்டு அமைந்த இந்தப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. அக்கூட்டத்தில் உற்சாகமாகப் படம் பார்த்தவர்களில் 7 பேருக்கு படம் முடிந்ததும் தங்கள் வேலைக்கு ஆபத்து இருக்கிறது என்பது தெரியாது.

 கோலிமிகுண்டா பகுதியை சேர்ந்த பந்தி ஆத்மகுர், மற்றும் கர்னூல் பகுதியை சேர்ந்த ரச்சர்லா, கோஸ்படு உள்ளிட்ட 7 போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆவலில் தியேட்டருக்கு சென்றுவிட்டனர்.அவர்கள் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள் என்பதால் கடமைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு தங்கள் கொண்டாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டனர். விவரமாக நடப்பதுபோல் தங்கள் யூனிஃபார்மை மட்டும் கழட்டிவிட்டு ஷைரா நரசிம்ம ரெட்டி படத்துக்குச் சென்றுவிட்டனர். அதை கொஞ்சம் அமுக்கி வாசித்திருந்தால் கூட எந்தப்பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் திரையில் சிரஞ்சீவி வரும்போது உற்சாக மிகுதியால் ஆட்டம்  போட்டதோடு அதை படமாகவும் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுவிட்டது. விடுப்போ அனுமதியோ பெறாமல் இவர்கள் தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றது எப்படி என்ற கேள்வியால் போலீஸ் துறையே பரபரப்பாகிவிட்டது.

தகவல் கர்னூல் எஸ்.பி. பகீரப்பா கவனத்துக்கு சென்ற உடன் தவறு செய்த 7 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி டிஎஸ்.பிக்கு உத்தரவு போய் இருக்கிறது. படம் முடித்து வெளியே வந்த 7 பேருக்கும் உயர் அதிகாரியிடம் இருந்து சஸ்பெண்டு உத்தரவு வந்துள்ளது. என்ன கொடுமை சரவணா இது? என்று அந்த 7 சப் இன்ஸ்பெக்டர்களும் நொந்துபோயுள்ளனர்.