25 ஆண்டுகளுக்குப் பின்னர் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ‘சேது’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

Chiyaan Vikram Sethu Movie Re release

90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் என்றால் அது ‘சேது’ தான். 1999-ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான அதிரடி காதல் திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியானது. படத்தின் திரைக்கதை, விக்ரமின் நடிப்பு, இளையராஜாவின் இசை, பாலாவின் தனித்துவமான இயக்கம் ஆகியவை இந்த திரைப்படத்தை ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. இது இயக்குனர் பாலாவின் முதல் படமாகும். நடிகர் விக்ரமின் திரை வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அபிதா, சிவக்குமார், ஸ்ரீமன், மனோபாலா, ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சேது படத்தின் திரைக்கதை

இந்தத் திரைப்படம் வித்தியாசமான கதைம்சம் கொண்டது. கல்லூரியில் படிக்கும் கட்டுப்பாடற்ற இளைஞனாக இருக்கும் சேது, பொறுப்பில்லாமல் சுற்றித்திரிகிறார். அப்போது கல்லூரிக்கு புதிதாக படிக்க வரும் அபிதாவை சந்திக்கிறார். முதல் பார்வையிலேயே அபிதா மீது சேதுவுக்கு ஈர்ப்பு உண்டாகிறது. அபிதாவின் காதலை பெற சேது பல முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆரம்பத்தில் சேதுவின் அராஜகமான போக்கால் அபிதாவுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் சேதுவின் விடாப்பிடியான காதலும், அவள் மீது சேது கொண்ட அன்பும் அபிதாவின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஆனால் சேதுவின் வாழ்க்கையில் விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியது.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட சேது படம்

சேதுவின் எதிரிகள் அவரை கடுமையாக தாக்குகின்றனர். இதனால் அவர் மனநோயாளியாக மாறுகிறார். சிகிச்சைக்காக அவர் மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. சேதுவின் பிரிவால் துயர் கொண்ட அபிதாவிற்கு வேறு ஒரு நபருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அதே சமயம் மனநிலை காப்பகத்தில் இருந்து குணமடைந்து அபிதாவை தேடி அந்த காப்பகத்தில் இருந்து தப்பித்து வெளியே வருகிறான் சேது. ஆனால் அபிதா தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறாள். இதை கண்ட சேது மனம் உடைந்து அங்கிருந்து வெளியேறி மீண்டும் மனநல மருத்துவமனைக்கே சென்று விடுவார். அத்துடன் இந்த படமும் நிறைவடைந்தது.

தமிழ் சினிமாவில் தனி பாணியை உருவாக்கிய சேது

இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. பாலாவின் எதார்த்தமான கதை சொல்லும் பாணி, கதாபாத்திரங்களின் ஆழமான சித்தரிப்பு, விக்ரமின் உணர்வுபூர்வமான நடிப்பு ஆகியவை இந்த படத்தை வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெறச் செய்தது. விக்ரம் தனது கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு ‘சீயான்’ என்கிற அடைமொழியும் வந்து சேர்ந்தது. தற்போது வரை அவர் சீயான் என்றே அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகிய அனைத்தும் உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியது. இந்தப் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்தது.

ரீ ரிலீஸாகும் சேது

இந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. ஆனால் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி மறுப வெளியீடு செய்த போது படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘சேது’ படத்தினை டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தும் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10 ஆம் தேதியுடன் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு படத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் விக்ரமின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.