பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பிரபல நடிகரின் மனைவியும், சின்னத்திரை சீரியல் நடிகையுமான சான்ரா, தனக்கு சின்னத்திரை உலகில் அரங்கேறிய பாலியல் வன்முறையை கூறி புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சான்ரா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது... " திரையுலகில் பலர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள்... இப்போது எனக்கு 'தலையணை பூக்கள்' சீரியல் நடிக்கும் போது அரங்கேறியதை இங்கு பதிவு செய்கிறேன் என கூறி அவருடைய குற்றங்களை கூற துவங்கியுள்ளார்.

"தலையணை பூக்கள்" என்கிற சீரியல் தான் தனக்கு சின்னத்திரையில் தனி அங்கீகாரத்தை பெற்று தந்தது. இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் 'ஸ்ரீகர்' திடீர் என இந்த சீரியலில் இருந்து விலகினார். பின் அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிகர் 'பிரகாஷ் ராஜன்' என்பவர் கமிட் ஆனார். 

இவர் 'தெய்வமகள்', சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பலரை ஆபாசமாக பேசி விமர்சித்ததால், இந்த நான் அவரிடம் இருந்து சற்று விலகியே இருந்தேன். அவருடன் இணைந்து நடிக்க கூடிய காட்சிகளை கூட தவிர்த்தேன்.

ஒருமுறை மிகவும் சத்தமாக என்னுடைய மார்பகங்கள் மற்றும் இடுப்பு என உடல் அழகை பற்றி என் காதில் கேட்குமாறு பேசினார். ஒரு நிமிடம் அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியில் உரைத்தேன். பின் அங்கேயே அழுது விட்டேன். 

இதனால் இந்த சீரியலில் இருந்து விலக நினைத்தே... இது குறித்து உரிய தொலைக்காட்சி மேலாளருக்கு புகார் செய்தேன். அவர்கள் முடிந்த வரை எடுத்து கூறினார்கள். பின் இயக்குனர் என்னை சமாதானம் செய்து மீண்டும் இந்த சீரியலில் தொடர வைத்தார்.

மேலும் பிரகாஷ் ராஜன், அனைத்து பெண் நடிகைகளும் தான் இது போன்று கூறுவதை ரசிக்கும் போது இவளுக்கு மட்டும் என்ன, என கேள்வி எழுப்பியதாகவும், இவரின் இந்த பேச்சுக்கு பின் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு போன் செய்து தன்னால் இனி சீரியலில் தொடர முடியாது என கூறி இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக, கூறியுள்ளார் சான்ரா. இவரின் இந்த ஆதங்கமாக ட்விட்டருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.