பாலிவுட்டில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்தவர் மோகனா குமாரி சிங். அதன் பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ஃபியார் ஃபைல்ஸ், சில்சிலா பியார் கா, பியார் துனே க்யா கியா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக ஆரம்பத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் மோகனா குமாரி சிங், டேராடூனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகனாவின் மாமியாருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை மோகனா குமாரி சிங், கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து குடும்பத்தினர் 5 பேரும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள மோகனா குமாரி  சிங், நாங்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் இருந்தோம். ஆனால் எங்கள் மைத்துனரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது எனக்கூறியிருந்தார். 

 

கடந்த ஒருவாரமாக குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வரும் மோகனா குமாரி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற்கு எந்த மருத்துவமும் இல்லை. உங்கள்  உடலை வலுவாக வைத்திருக்க வேண்டும். இந்தியர்களின் உணவின் மூலம் நமக்கு அது சாத்தியப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். இதுவரை கொரோனா பாசிட்டிவில் தான் உள்ளது. விரைவில் கொரோனா  தொற்று நெகடிவாக மாறும் என எதிர்பார்க்கிறேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவில் தனது குடும்பம் பற்றி பேசும் போது மோகனா குமாரி சிங் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களின் மனதை வேதனையடைச் செய்துள்ளது.