தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை கீதாஞ்சலி இன்று காலை ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

காகிநாடாவை சொந்த ஊராகக் கொண்ட கீதாஞ்சலி மறைந்த என்.டி.ராமாராவ் 1961ம் ஆண்டு தானே இயக்கி நாயகனாக நடித்த ’சீதாராம கல்யாணம்’படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். அடுத்து சுமார் 60 ஆண்டுகளாக தெலுங்கு, தமிழ்ப்படங்களில் மிக அதிகமாக நடித்த கீதாஞ்சலி இந்தி, மலையாளப் படங்களையும் விட்டு வைக்கவில்லை. தெலுங்கில் டாக்டர் சக்கரவர்த்தி,லேதா மனசுலு,பொப்பிலி யுத்தம், தேவதா, தமிழில் தெய்வத்தின் தெய்வம், வாழ்க்கைப் படகு, தாயின் மடியில் ,அதே கண்கள்,என் அண்ணன், அன்னமிட்ட கை ஆகியவை அவரது முக்கியமான படங்கள்.

லேட்டஸ்டாக தமன்னாவின் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தேட் இஸ் மகாலட்சுமி’படம் வரை நடித்திருக்கும் கீதாஞ்சலி உடல்நலக் குறைவால் சில தைனங்களுக்கு முன்பு ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை அவரது உடல்நலம் சீர்குலைந்த நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர். தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த ராமகிருஷ்ணாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கீதாஞ்சலிக்கு ஆதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார்.