தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகிறது. சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இதனால், நடிகர் ரஜினி நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல் உள்பட 60க்கு மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

அப்போது, போராட்டம் என்பது எப்போதும் தீர்வு ஆகாது. பேச்சு வார்த்தை மூலம் அனைத்தையும் சுமுகமாக முடித்து வைக்கலாம் என ரஜினி கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது.

இதுபற்றி ஆர்.கே.செல்வமணி, செய்தியர்ளர்களிடம் கூறுகையில், ரஜினி மற்றும் கமல், இந்த பிரச்சனையில் தலையிட தயங்குகிறார்கள். காரணம், இரு தரப்பினரும் அவர்களுக்கு சகோதரர்கள் போலவே. யாருக்காக குரல் கொடுத்தாலும், மற்றொரு தரப்பினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என நினைக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் அதை பெரிதாக்க வேண்டாம் என கூறியுள்ளோம். எங்களுக்காக பேசி உரிய வகையில் சுமுகமாக முடித்து வைக்க வேண்டும் என கேட்டு கொண்டோம். அவரும் அதற்கு உறுதியளித்துள்ளார்.

மேலும், எங்களுக்கு சம்பள பிரச்சனை என்பதே இல்லை. ஆனால், விதிமுறைகள் தான் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கு செல்வதற்கும், மாவட்டங்களுக்கும், சில நாடுகளுக்கும் செல்லும்போது, அதன் செலவு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஏற்று கொள்வதில்லை.

அதனால், இந்த போராட்டம் நடக்கிறது. இதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பணிகளில் ஈடுபடுத்துவது தவறான செயல். இதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வலியுறுத்தல் என்றார்.