'விஜய் சேதுபதியின் 25 வது படம். கண்டிப்பாக அவர் தேசிய விருது பெறுவார். ஆக்சுவலாக இந்தக் கதை கமலை மனதில் வைத்து எழுதப்பட்டது. அவரும் நடிக்க மிக ஆர்வமாக இருந்தாலும் அரசியல் துரத்திக்கொண்டிருப்பதால் விட மனசின்றிதான் விட்டுக்கொடுத்தார் போன்ற ஏகப்பட்ட பில்ட் அப்கள் கொடுக்கப்பட்ட படம் இந்த ‘சீதக்காதி’.

இப்போதெல்லாம் தமிழ்சினிமாவில் ‘கதை விடுவதை’ பலரும் படங்களுக்கு வெளியே வைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான ஒருவரித்தகவல் இந்த விமர்சனத்தின் கடைசிப் பாராவில் இருக்கிறது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மைல்ட் ஹார்ட் அட்டாக்கை சந்திக்கப்போகும் தகவலும் கூட அது.

படத் திரையிடலுக்கு முன் ‘தயவு செய்து இப்படத்தின் கதையை அப்படியே எழுதி படம் பார்க்க வருகிறவர்கள் அனுபவிக்க வேண்டிய சுவாரசியத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அவரது சொல்லுக்கு அடிபணிந்து சற்று பூடகமாகவே இப்படத்தின் கதையைப் பார்ப்போம்.

அய்யா ஆதிமூலம் ‘சத்தியவான் சாவித்திரி’ காலத்து நாடக நடிகர். அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு அய்யா ஆதிமூலம் என்று பெயர். அவருக்கு சினிமா வாய்ப்புகள் வருகின்றன. ஜனங்களுக்கு முன்னால நடிக்கிறது மட்டும்தான் கலை என்று மறுத்துவிடுகிறார். அப்புறம் சில தினங்களில் நாடகமேடையில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மரித்தும் விடுகிறார்.

அவரது பேரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழலில், அவரது நண்பரும் நாடக இயக்குநருமான மவுலி, அடுத்தடுத்து நடக்கும் நாடகங்களில் யாரோ ஒருவருக்குள் புகுந்து அய்யா ஆதிமூலம் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பதை உணருகிறார்.

இந்த சந்தர்ப்பத்தில் இவர்களது நாடகக்குழுவைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு சினிமாவில் கதாநாயகனாகும் வாய்ப்பு வருகிறது. பேரனை மனதில் வைத்தோ, செத்த பிறகு என்னத்துக்கு கொள்கை என்று நினைத்தோ ராஜ்குமார் உடம்பில் புகுந்து அய்யா ஆதிமூலம் நடித்துக்கொடுக்கிறார். இச்செய்தி சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க பரவ, ஒவ்வொருவரும் அய்யா ஆவியின் கால்ஷீட்டுக்க்காக காத்திருக்கிறார்கள்.

‘யோவ்... ‘சீதக்காதி’ படத்தோட கதையைச் சொல்றேன்ங்குற பேர்ல நீ பாட்டுக்க எதோ ரீல் விட்டுட்டுப்போற’ என்று உங்களுக்கு இந்நேரம் தோண ஆரம்பித்திருக்கவேண்டும். உங்கள் உச்சந்தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இதுதான் கதை. இன்னும் சில கூத்துக்களை நீங்கள் நேரில் பார்த்து அனுபவித்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் மீதியை வெள்ளித்திரையில் காண்க.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்ற தரமான காமெடிப்படம் இயக்கிய பாலாஜி தரணிதரனின் அடுத்த படம் இது. சிலர் சினிமாவில் ‘ஒன் ஃபிலிம் வொண்டர்’ என்பதோடு முடிந்துவிடுவார்கள் என்பது ஏனோ இங்கு தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது.

கதையை  ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு சில காட்சிகளைப் பற்றிப் பேசினால்... சினிமாவில் நடிப்பு வராமல் படுத்துகிறவர்களின் பாட்டை இவ்வளவு தத்ரூபமாக உலக லெவலுக்கு சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும் பத்துப்பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் சினிமா ஷூட்டிங் காட்சிகள் செம கிளாசிக் ரகம்.

மவுலி, அர்ச்சனா, ராஜ்குமார், பகவதிப்பெருமாள்,இயக்குநர் மகேந்திரன்,இயக்குநர் பாரதிராஜா என்று அத்தனை பேரும் வெகு சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். டார்லிங் ரம்யா நம்பீசனும் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே தலைகாட்டிவிட்டு தலைமறைவாகிவிடுகிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசையில் அதுவும் குறிப்பாய் நகைச்சுவைக் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறார்.ஒளிப்பதிவு சரசகாந்த்.

இப்படி ஒரு கதையை படமாக்கச் சொல்லி எந்த மறைந்த இயக்குநரின் ஆன்மா பாலாஜி தரணிதரனுக்குள் புகுந்ததோ, அவர் அடுத்த படத்துள்ளாவது வெளியேறுவாரா என்று சற்றே கவலை வருகிறது.

முதல் பாராவின் தொடர்ச்சிக்கு வருகிறேன். இப்படத்தில் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்து நீங்கள் பார்க்கமுடிவது அவரது ஒன்றிரண்டு கட் அவுட்டுகளை மட்டும்தான். வாட் எ சீட்டிங்... வாட் எ சீட்டிங்...