டிசம்பர் 21 ரிலீஸ் ரேசில் நாம் ஏற்கனவே சொன்னபடி சிவகார்த்திகேயனின் ‘கனா’ படமே வசூலில் முன்னணியில் நிற்கிறது. உடன் வந்த ‘அடங்க மறு’ முதல்நாளே அடங்கி நிற்க, ஓபனிங் வசூலில் முதல் இடத்தில் நின்ற ‘மாரி 2’ என்கிற தனுஷின் கரம் மசாலா ரெண்டாவது நாளே படுத்தேவிட்டது.

இந்த ரிலீஸில் பரிதாப இடத்தில் இருப்பதென்னவோ கெத்து நடிகரான விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’தான். வெறுமனே விஜய் சேதுபதியை மட்டுமே டிசைன்களில் வைத்து உருவாக்கப்பட்ட பில்ட் அப் முக்கிய காரணமாயிருக்க, தான் எடுத்திருப்பது மிகப்பெரிய காவியம் என்ற நினைப்பில் படத்தை இரண்டு மணி நேரம் மற்றும் 50 நிமிட நீளத்தில் ரிலீஸ் பண்ணியிருந்தார் இயக்குநர் பாலாஜி தரணீதரன்.

தற்போது படத்தில் தோல்விக்கு மிகக் குறைவான நேரம் விஜய் சேதுபதி தோன்றுவது ஒரு காரணமாக இருக்க, அடுத்த முக்கிய காரணம் படத்தின் நீளம் என்று தியேட்டர்கள் தரப்பிலிருந்து தகவல் வரவே,’ கொஞ்சமும் கவுரவம் பார்க்காம ஒரு அரைமணி நேரப்படத்தை வெட்டி எறிங்க சார்’ என்று இயக்குநரிடம் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டாராம்.

வந்த ரிப்போர்ட்களால் ஏற்கனவே வெலவெலத்துப்போயிருந்த பாலாஜி தரணிதரன் சற்றும் யோசிக்காமல் விஜய் சேதுபதியின் ஒரு காட்சி உட்பட 22 நிமிடக் காட்சிகளை வெட்டிவீசிவிட்டாராம்.