Seenu Ramasamy trigger to Vishal

அன்புச்செழியன் விவகாரம் கோலிவுட்டை பரபரப்பாக வைத்திருப்பது மட்டுமில்லை, இரண்டாக பிளக்கவும் செய்திருக்கிறது. அமீர், சசிக்குமார், சமுத்திரகனி, விஷால் உள்ளிட்டவர்கள் அன்புக்கு எதிராக ஒரு பிரிவாகவும். பாலா, சீனுராமசாமி உள்ளிட்ட சிலர் அன்புக்கு ஆதரவாகவுமாக நின்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் அன்புச்செழியனுக்கு எதிரான தரப்பு அன்புவை குறிவைத்து போட்டுத் தாக்க, அவருக்கு ஆதரவான தரப்போ எதிரணி இயக்குநர்கள், நடிகர்களை துவைத்து எடுக்கிறது. அதில் சீனு ராமசாமி, நடிகர் விஷாலை போட்டுப் பொளந்திருக்கிறார் இப்படி...

“ஒரு படம் ஹிட்டானதும், அந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் தொகையையும் அடுத்த படத்திற்கு சம்பளமாக ஹீரோக்கள் கேட்டால் என்னதான் செய்வார்கள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்? எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த், மற்றும் ரஜினிகாந்த் போன்ற சீனியர் நடிகர்கள் இப்படி இல்லை. இவர்களின் நடவடிக்கையை இளம் ஹீரோக்கள் பின்பற்ற வேண்டும். 

ஆனால் இவர்கள் அன்புச்செழியன் போன்ற உத்தமர்களை தவறாக சித்தரிப்பது வேதனையளிக்கிறது. அன்பு மீது மட்டும் இவர்கள் குற்றம் சொல்வது சரியா? 30 கோடி ரூபாய் கடனை ஒரு பைசா வட்டிக்கு கொடுத்துவிட்டு, அதை திருப்பிக் கேட்பது தவறா? கேட்கும் போதெல்லாம் கொடுக்காமல் இருந்தது யார் குற்றம்? அன்புவும் வாழணும் இல்லையா! கடனாய் கொடுத்த பணம் திரும்பி கிடைத்தால்தானே அவரும் வாழ முடியும், அடுத்த தயாரிப்பாளருக்கு கொடுக்க முடியும்! புதிய படங்கள் இப்படித்தானே உருவாகும்.

அன்புச்செழியனுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் விஷால் உள்ளிட்ட அத்தனை பேரும் அவரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளவர்கள்தான். இப்போது அன்புவுக்கு ஒரு பிரச்னை என்றதும், அவருக்கு எதிராக சப்தமிட்டால் அந்த பிரச்னையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிற ஒரே காரணத்துக்காக அசோக்குமார் விவகாரத்தை கையிலெடுத்து எதிர்த்து நிற்கிறார்கள். அப்படியே கடனை ஸ்வாஹா செய்யத்தான் இந்த சவுண்டு.” என்றிருக்கிறார். 
சீனுவின் இந்த வேட்டு விஷாலை நிலைகுலைய வைத்திருக்கிறது.