சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிட்டா நல்லாருக்கும்.. தேசிய விருது வென்ற இயக்குனரின் கோரிக்கையை ஏற்பாரா உதயநிதி?
Udhayanidhi Stalin : வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என பிரபல இயக்குனர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பின் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த ஓராண்டில் தமிழ் சினிமாவில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தையும் கைப்பற்றி, இவரின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்திற்கு திரைத்துறையினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தை பார்த்த பின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்தது நெஞ்சுக்கு நீதி. அன்று நான் சொன்னது போல இதுபோன்ற கதை கருத்தாழமிக்க மக்களிடையே வாழும் படங்களில் நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்கு கருத்துலகமும் கைவிடாது.
அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழம் தருணத்தை எதிர்நோக்கி... வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். சீனு ராமசாமியின் இந்த கோரிக்கையை உதயநிதி ஏற்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ப்ளீஸ் எங்கள சேர்த்து வைங்க... இரவில் சிம்பு வீட்டின் முன் சீரியல் நடிகை தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு