Seeman Support Cinema Financier Anbu sezhiyan



அன்புச்செழியனை போலீஸ் தேடுகிறது! தேடுகிறது...என்று ஒரு பக்கம் வலை வீசிக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கத்தில் கோலிவுட்டுக்குள்ளேயே அவருக்கான ஆதரவுக்கான அடர்த்தி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

பாலா, சீனுராமசாமி, தேவயானி, விஜய் ஆண்டனி வரிசையில்  இயக்குநர் கம் அரசியல்வாதி சீமானும் அன்பு மீது அளவில்லாத அன்பு மழை பொழிந்து தள்ளியிருக்கிறார். 

சென்னை மதுரவாயலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர் “சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணம் வருத்தத்தை தருகிறது. ஆனாலும் அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய மரணம். அந்த மரணத்தை  தடுத்திருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. 

இனி வரும் காலங்களில் இது போன்ற துயரம் நடக்க கூடாது. ஆனால் அசோக்கின் மரணத்துக்காக அன்புவை குற்றம் சொல்ல முடியாது. அன்புச்செழியன் போன்ற நிதி தருபவர்கள் இல்லையென்றால் யாரும் சினிமா எடுக்க முடியாது.

தன்னிடம் வந்து பணம் வாங்குங்கள் என்று யாரையும் அவர் அழைப்பதில்லை. நாம் தான் விரும்பி போயி வாங்குகிறோம். சாதாராண சாமானியர்களை நம்பி பல கோடி ரூபாய் கொடுக்கிறார் அவர். அரசு வங்கிகளே கொடுத்த கடனை திருப்பி செலுத்தாதவர்களை கட்டி வைத்து அடிக்கிறது. போலீஸார் அடிக்கவில்லையா?! அதுபோலத்தான் கடனை கொடுத்துவிட்டு அதை திருப்பி கேட்கும்போது கடுமை காட்டினால் அது தன்மான இழப்பாகிறது, உயிரிழப்பு ஏற்படுகிறது. 

சினிமாவுக்கு பணம் கொடுப்பவர்கள் வெகு சிலர்தான் உள்ளனர். அவர்களையும் இப்படி பணம் கொடுப்பதை நிறுத்த வைத்துவிட்டால் பின் எப்படி படமெடுக்க முடியும்?” என்று பொங்கியிருக்கிறார். 

பாலாவுக்கு அடுத்து சீமானும் இப்படி அன்புவுக்கு ஆதரவுக்கொடி பிடித்து நிற்பதால் சசி,சமுத்திரக்கனி வட்டாரங்கள் அரண்டு போய் கிடக்கின்றன. 

இப்படி தினமும் அன்புவுக்கு ஆதரவுப்படை கூடிக் கொண்டே செல்வதால், தாங்கள் கொடுத்திருக்கும் புகார் நீர்த்துப் போகுமோ?! என்று சசி புலம்பித் தவிக்கிறாராம்.