தேர்தல் தேதி மிகவும் அருகில் வந்துவிட்டதாலோ, வெயிலின் கொடுமை தாங்கமுடியாமலோ நாம் தமிழர் சீமானின் பேச்சில் அனல் சற்று ஓவராகவே வீச ஆரம்பித்திருக்கிறது. அதிலும் அவர் பேச்சில் ரஜினி தரைமட்டத்துக்குத் தாக்கப்படுவதால்  ரஜினி ரசிகர்கள் சீமான் மீது கொலவெறிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மும்பைக்கு ‘தர்பார்’ படப்பிடிப்புக்குக் கிளம்புமுன் தன் போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, நதி நீர் இணைப்பு விவகாரத்தில் தான் பா.ஜ.கவை ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தந்த சீமான் மிக ஆக்ரோஷமாக, “ரஜினி ஒரு நடிகர் அவரை இயக்கும் இயக்குனர் மோடி. இயக்குனர் என்ன கூறுகிறாரோ அதைத்தானே ரஜினி செய்வார். இதன்மூலம் ரஜினி தலைக்கு மேலேயும் ஒன்றுமில்லை தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது” என்று பேட்டியளித்திருந்தார்.

அதே ஆத்திரத்தை நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நிகழ்விலும் காட்டிய சீமான்,”இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல 'இடியட்ஸ்' பேசிக்கொண்டு அலைகின்றனர். ஏரியை, குளத்தை என் தாத்தன் வெட்டினான். கம்மாயை என் பாட்டன், முப்பாட்டன் வெட்டினான். கிணறு, ஊருணியை வெட்டினான்.

ஆற்றை நாங்கள் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெருங்கொடை. அருவி தானாக பாதை கண்டு ஓடியது. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள்?" என்று மீண்டும் ரஜினியை விளாசித்தள்ளினார். இதனால் ரஜினி ரசிகர்கள் சீமான் மீது பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.