தேர்தல் நடத்தை விதிகளை மீறி சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கேரள மாநிலம் திருச்சூரில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில், அஜித் நடித்த தீனா ஷங்கர் இயக்கிய ’ஐ’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்  விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் நேற்று தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சபரிமலை விவகாரம் பற்றியும் ஐயப்பனை பற்றியும் பேசி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது சபரிமலை விவகாரம் கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது என்று கூறினார்.

சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராம் மீனா, தடை விதித்திருந்த நிலையில் சுரேஷ் கோபியின் பேச்சு அப்பட்டமான  விதிமீறல் என்று பிறக்கட்சிகள் புகார் செய்தன. இதையடுத்து நடிகர் சுரேஷ் கோபி, 48 மணி நேரத்துக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கேரள அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.