பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா தொடர்ந்து ஊட்டசத்து காரணமாக பாதிப்படும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார். மேலும் 'அட்சய பாத்திரம்' என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். 

சமீபத்தில் இந்த அமைப்பு மூலம், அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கும் முறை அமல் படுத்தப்பட்டது. இவரின் இந்த நடவடிக்கை அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் தற்போது இரும்பு சத்து, குறைபாட்டினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... "மதிப்பிற்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் உயர்திரு.விஜயபாஸ்கர் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜின் கோரிக்கை.

தமிழ் நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் கர்ப்பிணி பெண்களில் ஐந்தில் இரண்டு பெண்கள் வீதம், இரும்புச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.  ஏப்ரல் 2018 ல் இருந்து மார்ச் 2019 வரை ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரும்புச் சத்து குறைபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் ஆபத்தானது.  தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் என்கிற முறையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு மருத்துவமனைக்கு வரும் இரும்புச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை மருந்துகளை, வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்", என்று சத்யராஜின் மகள் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் இந்த முயற்சியை பலர் வரவேற்று வருகிறார்கள்.