நடிகர் சத்யராஜ், மற்றும் அவருடைய மகன் சிபிராஜ் ஆகிய இருவருமே கோலிவுட் திரையுலகில் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துவிட்டனர்.

தற்போது சத்யராஜின் மகள் திவ்யாவும் திரையுலகில் அறிமுகமாகிறார். ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில் திவ்யா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம் .
 
இந்த குறும்படத்தில் அவருடன் முன்னணி கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் வீரர்களும் நடிக்கவுள்ளனர். விளம்பர பட இயக்குனர் வினீத் ராஜன் இயக்கும் இந்த குறும்படத்தில், சாஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
 
இந்த குறும்படம் குறித்து திவ்யா கூறியபோது, 'உடற்பயிற்சி என்பது வேறு, கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பது வேறு. 

ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் சிலர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால்  உடற் பயிற்சி  செய்ய தேவை இல்லை எனவும், உடற்பயிற்சி  செய்தால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க  தேவை இல்லை என்கின்ற மன நிலையிலும் தான் இருக்கின்றனர். 

உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
 
என்னதான் 'டிரட் மில்' போன்ற  அதி நவீன உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி  உடற்பயிற்சி செய்தாலும், பெரும்பாலானோருக்கு அதில் தொடர்ந்து நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. 

அதற்கு காரணம்,  'கலோரி' குறைந்து விட்டதா என்ற பயந்து பயந்து பயிற்சி மேற்கொள்வது தான். ஆனால் விளையாட்டு என்பது அப்படியில்லை. நம்முடைய முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும்  'கலோரிகள்' தாமாகவே குறைந்துவிடும்.  

மற்றும் மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக  செயல்படுவது மட்டுமன்றி, சிறந்த ஒரு உடற்பயிற்சியாகவும் விளையாட்டு கருதப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

விளம்பரப்படம் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் திவ்யாவிற்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்.