‘பேனா தயாரிக்கிறவெனெல்லாம் பாரதியார் ஆக முடியாது. கிரிக்கெட் பேட் தயாரிப்பவனெல்லாம் டெண்டுல்கர் ஆக முடியாது என்கிற வழமையான நியதியை உடைத்து, மிருதங்கம் தயாரிக்கும் ஒரு தலித் வீட்டுப்பிள்ளையை மிருதங்க வித்வான் ஆக்கிப்பார்க்க ஆசைப்பட்டிருக்கும் ராஜீவ் மேனனின் செல்லுலாய்ட் கவிதைதான் ‘சர்வம் தாளமயம்’.

ராஜீவ் மேனன் இரண்டாவது படமான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ வெளியாகி 18 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் அவரது மூன்றாவது படம் இது. ‘இந்த 18 ஆண்டுகளில் நான் சினிமாவை விட்டு ஒரு நாள் கூட வெளியே போனதில்லை. ஆனாலும் இவ்விதம் ஒரு படம் கொடுக்க, காரணம் சொல்லமுடியாத காரணங்களால் தாமதமாகிவிட்டது’ என்று படம் துவங்குவதற்கு முன்பு ஓரிரு வார்த்தைகள் உரையாடிய ராஜீவ் மேனன் சொன்னார்.

கதை இதுதான்... பீட்டர் ஜான்சன் ஆகிய ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிகர் விஜய் ரசிகர் மன்ற வெறியர்களில் ஒருவராகப் பட ரிலீஸ் நாட்களில் பட்டாசு கொளுத்துவது அண்டா அண்டாவாகப் பாலாபிஷேகம் செய்வது என்று  பொறுப்பின்றி திரிகிறார். அவரது தந்தை குமாரவேல் மிருதங்கம் தயாரித்து விற்றுப் பிழைக்கும் கூலித்தொழிலாளி. 

நடுவே தற்செயலாக சந்திக்கநேரும் அபர்ணா பாலமுரளியை ஜெர்மன் செஃபர்ட் நாயாக மாறி காதலிக்கிறார்.  அப்படி காதல் வரும்போது நாயகனுக்கு பொறுப்பு வரத்துவங்கவேண்டுமே? யெஸ்... ஒரு முறை மிருதங்க டெலிவரிக்காக கர்நாடக இசைக்கலைஞர் நெடுமுடி வேணுவைச் சந்திக்கச் செல்லும் ஜீ.வி.பிரகாஷ் அவரது இசையில் மயங்கி, சிஷ்யனாக சேர விரும்புகிறார்.

‘எங்க கலாச்சாரம் உனக்கு வராது ஓடிப்போ’ என்று முதலில் விரட்டும் நெடுமுடி வேணு, ஜீ.வியை சேர்த்துக்கொண்டு கற்றுத்தருவதும், அடுத்து குரு சிஷ்யர்களுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடு, க்ளைமேக்ஸில் ஜீ.வி. பிரகாஷ் குருவின் வாரிசாக உயர்ந்தாரா என்று போகிறது கதை. படத்தின் இரண்டாவது பாதியில் இடம்பெறும் மியூசிக்கல் ரியாலிட்டி ஷோக்களின் தில்லுமுல்லு தகிடுத்தத்தங்களை, அதுவும் சாட்சாத் டி.டி திவ்யத்ர்ஷினியை வச்சே வச்சி செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு கணமும் தாமதிக்காது முதலில் ஏ.ஆர். ரகுமானைப் பற்றி குறிப்பிட்டாகவேண்டும். 2016ல் படம் துவங்கிய காலத்திலேயே போட்டதாலா, ராஜீவ் மேனன் மற்றும் ஜீ.வி மேல் உள்ள பாசத்தாலா என்று தெரியவில்லை சிம்பிளான ஆர்கஸ்ட்ரேஷனில் அவ்வளவு தனித்துவம் வாய்ந்தனவையாக  இருக்கின்றன பாடல்கள். குறிப்பாக சின்மயி பாடியுள்ள ‘மாயா மாயா’ மனதுக்குள் பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடுகிறது. அவரது ‘மி டு’ லிஸ்டில்  சிக்கிக்கொள்ளலாமா என்று சின்னதாய் ஒரு சபலம் வந்துபோகிறது.

நெடுமுடிவேணுவின் நடிப்பைப் பற்றி இனியும் எழுத என்ன இருக்கிறது என்று பேசாமல் ஒதுங்கிபோய்விடுவது நல்லது. குமாரவேல் தமிழ்சினிமாவின் குணச்சித்திர பொக்கிஷம். இவர்களுக்கு அடுத்தபடிதான் நாயகன் ஜீ.வியின் நடிப்பு சமாச்சாரத்திற்கே வரவேண்டியிருக்கிறது. துவக்கத்தில், இப்படத்தில் இடம்பெற்றது போலவே பொறுப்பற்ற பொறுக்கி ரசிகராக சில படங்களில் நடித்து வந்த மெல்ல இயக்குநர்களின் நடிகராகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறப்பான நடிப்பு படம் முழுக்க சர்வம் தாராளமயமாக இருக்கிறது.

நாயகி அபர்ணா பாலமுரளிக்கு படத்தில் அதிக வேலையில்லை. ஆனாலும் ஹைகூ மாதிரி சின்னச்சின்ன எக்ஸ்பிரசன்களை கிடைக்கிற கேப்பிலெல்லாம் சிதறிச்செல்கிறார்.

எடுத்துக்கொண்டது ஒரு சர்வதேச கரு. ராஜீவ் மேனன் நினைத்திருந்தால் அட்லீஸ்ட் இந்திய அளவில் நடக்கும் ஒரு போட்டியில் ஜீ.வி பிரகாஷ் சாதித்தார் என்றாவது படமாக்கியிருக்கமுடியும், ஆனால் என்ன காரணத்தாலோ, அவரே படம் முழுக்க பயங்கரமாகக் கிண்டலடிக்கும் ஒரு டி.வி.ஷோவின் போட்டியில் ஹீரோவை ஜெயிக்க வைத்து ஆனந்தமடைந்திருக்கிறார்.

படம் கண்டிப்பா நல்லாருக்கு ராஜீவ் மேனன். ஆனால் வீரேந்திர சேவாக் மாதிரி ஒரு இண்டர்நேஷனல் பிளேயர் உள்ளூர் மேட்ச்ல ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸர் அடிச்சா என்ன உணர்வு வருமோ, அதுமாதிரிதான் இருக்கு.