மெகா அரசியல் தலைவர்கள், மாஸ் ஹீரோக்கள், தாறுமாறான உச்சத்தில் இருக்கும் உயரதிகாரிகள் இவர்களின் உதவியாளர்களாக, ஜுனியர்களாக பயணித்த நபர்கள் மீது புகழ் வெளிச்சம் பெரிதாய் விழாது. அப்படியே விழுந்தாலும் அதற்கென்று ஒரு கெத்து இருக்காது. 

இந்த நிலையில், மேற்படி நபர்கள் ரிட்டயர்டு ஆன பின்னரோ அல்லது வாய்ப்புகள் இழந்து ஒதுங்கிய பின்னரோ தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள கையில் எடுக்கும் விஷயம்தான் ’ஆட்டோபயோகிரபி! அதாவது சுயசரிதை புத்தகம் எழுதுவது. அல்லது எந்த பெரிய மனுஷனின் நிழலில் நின்றோமோ அந்த மனிதரின் வெளிவராத விஷயங்களைப் பற்றி பயோகிராபி எழுதுவது. 

இந்த இரண்டுமே பெரும் சர்ச்சையை கிளப்பும், எழுதியவரும் புகழடைவார். இந்த ரூட்டில் ஃபேமஸான முகங்கள் இந்தியாவில் அதிகம். இந்த நிலையில், இந்தியாவில் தாய்க்குலத்தின் ஏஹோ ஓஹோபித்த ஆதரவை மிக மிக அதிகம் பெற்ற  ஹீரோ மற்றும் அரசியல்வாதியான எம்.ஜி.ஆரை பற்றிய மிகப்பெரிய சர்ச்சை ரகசியம் ஒன்றை, சினிமாக்கதை  எழுத்தாளராக இருந்த சின்ன அண்ணாமலை என்பவர் எப்பவோ  எதிலோ எழுதி, அது பெரிதாய் வெளியே வரமால் இருந்திருக்கிறது. 

இந்த நிலையில் தமிழின் மிகப்பிரபல வார இதழ் ஒன்றில் ஆர்.சி.சம்பத் என்பவர் ‘சின்ன அண்ணாமலை’யின் அந்த  விவகாரத்தை எடுத்து மறுபதிவு செய்துள்ளார். ச்சும்மா செம்ம வைரலாக துவங்கியுள்ளது விவகாரம். 

சின்ன அண்ணாமலை எழுதியவை அப்படியே இங்கே...

“எம்.ஜி.ஆர். நடித்த ‘என் தங்கை! அந்தமான் கைதி!’ உள்ளிட்ட சில சமூக படங்கள் ஓடவில்லை. அதனால் சரித்திரப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார். அவரது ‘சக்கரவர்த்தி திருமகள்’ திரைப்படத்தில் நான் பணியாற்றிய போது எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டது. அவரை வைத்து  ஒரு சமூகக் கதையை படமாக்க விரும்பினேன். அதனால் ‘பாக்கெட் மார்’ என்னும் இந்திப்படத்தை போட்டுக் காட்டினேன். ‘சரி இந்தக் கதையை எடுக்கலாம். எனக்கு இது ரொம்பப் பிடித்திருக்குது.” அப்படின்னார்.  அந்தப் படத்துக்கு ‘திருடாதே’ன்னு பேர் வெச்சோம். 

ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் தனியாக உட்கார்ந்திருந்தேன். அப்போ அங்கே டைரக்டர் சுப்பிரமணியம் புதல்வி பத்மா வந்தார். கூடவே ஒரு இளம் பொண்ணும் வந்தாள். அந்தப் பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தி ‘இவள் பெங்களுரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். தமிழிப் படத்தில்  நடிக்க ஒரு சின்ன சான்ஸ் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க’ என்றார்.


 
உடனே நான் கதை எழுதிய ’தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனமணிகளில் ஒருத்தியாக நடிக்க வைத்தோம். சின்ன வேடம்தான். சம்பளம் இருநூற்று ஐம்பது. அந்தப் பொண்ணுதான் பிற்காலத்துல பெரிய கதாநாயகியான சரோஜாதேவி. 

எம்.ஜி.ஆர்.கிட்ட புதுமுகம் சரோஜாதேவி பத்தி சொன்னேன். ‘ஒரு டெஸ்ட் எடுங்க. பார்க்கலாம்’னார். டெஸ்ட் எடுப்பதுங்கிறது மேக்-அப் போட்டு பலவிதமாக நடிக்கச் சொல்லி படமாக எடுப்பது. அந்த டெஸ்ட்டை எம்.ஜி.ஆர். பார்த்தார், கூடவே நாங்க சில பேரும் பார்த்தோம். சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதை சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக்காட்டினாங்க.
உடனே எம்.ஜி.ஆர். “அதுவும் ஒரு ‘செக்ஸி’யாகத்தானே இருக்குது. இந்தப் பொண்ணையே கதாநாயகியாக்கிடுங்க!”ன்னார். அந்த திருடாதே! படம்  பெரிய வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருக்கும் வெற்றிகரமான முதல் சமூக படமாக அது அமைஞ்சுது. அவரது வளர்ச்சிக்கும் திருப்புமுனையானது.”
அப்படின்னு எழுதப்பட்டிருக்குது. 

இதுதான் புரட்சித் தலைவரின் வெறி ரசிகர்களுக்குள் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. ‘எம்.ஜி.ஆர்! ஒரு புதுமுக நடிகையின் நடையைப் பார்த்து ‘செக்ஸி’ன்னு சொன்னாரா? வாய்ப்பே இல்லை. அவர் பெண்களை தெய்வமாக மதிப்பவர். அவரோட புகழை அசிங்கப்படுத்தணும்னே இப்படி ஒரு தவறான தகவல் கிளப்பப்பட்டிருக்குது!” என்று கொதிக்கின்றனர். 

அதற்கு ‘செக்ஸி!ன்னா தப்பான மீனிங் இல்லை. கவர்ச்சியான! ஈர்ப்பான!ன்னு அர்த்தம். சினிமா துறையில் ஒரு காலத்தில் யூஸ் ஆன இந்த வார்த்தை, இப்போ சர்வசாதாரணமா காலேஜ் பொண்ணுங்களுக்குள்ளே புழங்கப்படுது. ஆனா நீங்க இன்னும் இப்படியே இருக்குறீங்க!’ என்று பதிலடி வந்து விழுகிறது. 
ஆனாலும் புரட்சித் தலைவரின் ரசனைரசனை போங்கோ!...லவ் பேர்ட்ஸ்! லவ் பேர்ட்ஸ்! தக்கதிமிதா!