துப்பாக்கி, கத்தி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாசுடன், நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

   துப்பாக்கி, கத்தியை போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மிகப்பெரிய கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்ற போது விஜய் பேசிய அரசியல், படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது/ தலைப்பிற்கு ஏற்றவாறு படமும் இருக்கும் என்று கருதப்படுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. விநியோகஸ்த உரிமையில் இப்படம் பல்வேறு பகுதிகளில் கோடிகளை குவித்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

    இந்த நிலையில் தமிழகத்திற்கு அடுத்தபடியாக விஜய்க்கு ரசிகர்கள் கணிசமாக உள்ள கேரளாவில் மட்டும் சர்காரின் விநியோகஸ்த உரிமை 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி 5 படங்களில் புலியைத் தவிர்த்து பிற அனைத்துப் படங்களும் லாபமீட்டிக் கொடுத்ததால் சர்கார் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

   இது இதற்கு முன்னர் வேறு எந்த தமிழ் படமும் கேரளாவில் செய்யாத சாதனை என்று கருதப்படுகிறது. பிற மொழிப் படங்களில் விநியோகஸ்த உரிமை வியாபாரத்தில் இரண்டாவது இடத்தை சர்கார் பெற்றுள்ளது. முதல் இடத்தில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது.